கோலாலம்பூர்,
சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) முடிவைத் தற்காத்துப் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கூட்டரசு அரசாங்கத்தில் அரசியல் உறவைப் பேணுவதற்காக சரவாக் கட்சிகள் கூட்டணிக்கு (ஜிபிஎஸ்) பிகேஆர் அடிபணிந்துவிட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்தார்.
“நான் ஒத்துழைக்கிறேன்; அடிபணியவில்லை,” என்று இன்று 2026–2030 தேசியப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
எனினும், ஜிபிஎஸ் கூட்டணியுடனான ஒத்துழைப்பு குறித்து பிகேஆர் தலைவரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான அன்வார் மேல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
கூட்டரசு அரசாங்கத்திற்கு ஜிபிஎஸ் தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதி செய்வதற்காக சரவாக்கின் ஜனநாயகத்தை பிகேஆர் தியாகம் செய்துவிட்டதாக சரவாக் ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) தலைவர் சோங் சியெங் ஜென் முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுவரை 12 வேட்பாளர்களை அறிவித்துள்ள ஜசெக, சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கைக் கூட்டணியின் ஒரே உறுப்புக் கட்சியாக விளங்குகிறது. பிகேஆரைப் போன்று அமானா கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது.
இதனிடையே, சரவாக் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற பல தேசியக் கட்சிகளின் முடிவு அவற்றின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்டது என ஜிபிஎஸ் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.
ஒத்துழைப்புக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்கும் சரவாக்கின் அரசியல் அணுகுமுறையை அக்கட்சிகள் புரிந்துகொண்டுள்ளதாகவும், மாநில அளவிலான அரசியல் போட்டி கூட்டரசு அளவிலான உறவுகளைப் பாதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சரவாக்கில் ஆட்சி புரியும் ஜிபிஎஸ், அன்வார் தலைமையிலான கூட்டரசு அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாக விளங்குகிறது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சரவாக் மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 82 சட்டமன்றத் தொகுதிகளில் ஜிபிஎஸ் 76 தொகுதிகளிலும் ஜசெக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பிகேஆர், அமானா ஆகிய கட்சிகள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
சரவாக் மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும் டிசம்பர் 8ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பும் நடைபெறும்.























