46.2 கோடி ரிங்கிட் திரட்டும் KK Mart! பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான பங்கு வெளியீட்டு அறிக்கை அறிமுகம்

கோலாலம்பூர்,

மலேசியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான KK Mart Retail Berhad, தனது முதலீட்டு விவர அறிக்கையை ஆரம்பப் பொது பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் 46 கோடியே 20 லட்சம் ரிங்கிட் வரை திரட்ட இலக்கு கொண்டுள்ளது.

Bursa Malaysiaவின் முக்கிய சந்தையில் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, அந்நிறுவனம் தனது ஆரம்பப் பொது பங்கு வெளியீட்டு அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

அதிகபட்சமாக ஒரு பங்கிற்கு 55 சென் என்ற விலையில் மொத்தம் 84 கோடி சாதாரண பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதில் 21 கோடி புதிய பங்குகளும் 63 கோடி ஏற்கெனவே உள்ள பங்குகளும் அடங்கும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்னர் KK Mart நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 190 கோடி ரிங்கிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் மொத்தத் தொகையில் 11 கோடியே 55 லட்சம் ரிங்கிட் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. எஞ்சிய 75 விழுக்காட்டுத் தொகை ஏற்கெனவே உள்ள பங்குகளை விற்பனை செய்யும் பங்குதாரர்களுக்குச் சென்றடையும்.

வர்த்தக விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம்

நிறுவனத்திற்குக் கிடைக்கும் நிதியில் 21.7 விழுக்காடு நாடு முழுவதும் புதிய கிளைகளைத் திறப்பதற்கும், 41.9 விழுக்காடு விநியோக மைய விரிவாக்கத்திற்கும், 24.2 விழுக்காடு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்படவுள்ளது. எஞ்சிய தொகை பங்குச் சந்தைப் பட்டியலிடுதல் தொடர்பான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

    KK Mart குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ சாய் கீ கான் கூறுகையில், இந்த ஆரம்பப் பொது பங்கு வெளியீடு நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றார்.

“மலேசியர்கள் தங்களது அன்றாடத் தேவைக்கான பொருட்களை எளிதாகவும் வசதியாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது பயணத்தைத் தொடங்கினோம்.

“24 மணி நேர வர்த்தக நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம். 2026 ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் எங்களது மொத்த விற்பனையில் 49.1 விழுக்காடு நள்ளிரவு நேர வர்த்தகத்தின் மூலம் பதிவாகியுள்ளது.

“இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி, புதிய கிளைகளைத் திறக்கவும் விநியோக மையங்களை விரிவுபடுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் உதவும்,” என்று அவர் தெரிவித்தார்.

வருமானம் 7.1 விழுக்காடு அதிகரிப்பு

இதனிடையே, 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கையையும் KK Mart வெளியிட்டது.

அதன்படி, நிறுவனத்தின் வருமானம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.1 விழுக்காடு அதிகரித்து 45 கோடியே 80 லட்சம் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது.

நிறுவனத்தின் மொத்த லாபம் 9.8 விழுக்காடு அதிகரித்து 13 கோடியே 31 லட்சம் ரிங்கிட்டாகவும், வரிக்குப் பிந்தைய லாபம் 5.8 விழுக்காடு அதிகரித்து 2 கோடியே 45 லட்சம் ரிங்கிட்டாகவும் பதிவாகியுள்ளது.

தற்போது மலேசியா முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள கே.கே. மார்ட், தனது 24 மணி நேர வர்த்தகச் சேவையின் மூலம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.

டிசம்பர் 15இல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

கே.கே. மார்ட் நிறுவனத்தின் ஆரம்பப் பொது பங்குகளுக்கான விண்ணப்பம் இன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடையும்.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி புர்சா மலேசியாவின் பிரதான சந்தையில் அந்நிறுவனம் பட்டியலிடப்படவுள்ளது.

இந்தப் பங்கு வெளியீட்டிற்கான முதன்மை ஆலோசகராகவும் பங்கு வெளியீட்டு நிர்வாக நிறுவனமாகவும் Maybank Investment Bank Berhad செயல்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here