கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பலியாயினர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள சீல்டா நோக்கி கஞ்சன்ஜங்கா பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 9 மணி அளவில் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ரங்கபானி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.
அப்போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் மோதியது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 2 பார்சல் பெட்டிகளும், பொது பெட்டியும் தடம்புரண்டது. மோதிய சரக்கு ரயிலின் இன்ஜின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி ஒன்று விழுந்தது. இந்த விபத்தால் ரயிலில் இருந்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். உடனடியாக போலீசாரும், பயணிகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரயில்வே போலீசார், டாக்டர்கள், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்புப்படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் 15 பயணிகள் பலியானதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில், சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் துணை பைலட்டும், எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டும் பலியாகி உள்ளனர். விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதற்கட்ட தகவலின்படி, சரக்கு ரயிலின் லோகோ பைலட் சிக்னலை மீறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணைக்குப் பிறகே உண்மையான காரணம் உறுதிபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.
























