கோலாலம்பூர்,
யூடியூப் தளத்தில் இடம்பெற்ற உள்ளடக்கங்கள் தொடர்பில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக 60 கோடி ரிங்கிட் இழப்பீடு கோரி இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ள போதிலும், மலேசியாவில் அந்நிறுவனத்தின் முதலீடுகள் பாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இணையச் சூதாட்டம் தொடர்பான புகார்கள் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் பொராட்டுடன் நேற்று தொடர்புகொண்டு பேசியதாகவும், இவ்விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்ததாகவும் அன்வார் கூறினார்.
“இணையச் சூதாட்டம் தொடர்பில் கூகுள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளோம். எனினும், ஆறு மாதங்கள் கடந்தும் சில புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருப்பினும், இது அந்நிறுவனத்தின் முதலீடுகளைப் பாதிக்காது,” என்றார் அவர்.
அம்பாங் பண்டார் பாரு பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து கூகுள் நிறுவனம் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தாம் நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 1,500 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக இம்மாதத் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனிடையே, கூகுள் எல்எல்சி நிறுவனத்திற்கு எதிராக தலா 30 கோடி ரிங்கிட் இழப்பீடு கோரி இரண்டு வழக்குகளைத் தொடுத்துள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) கடந்த புதன்கிழமை அறிவித்தது.
இணையச் சூதாட்டம், மோசடி உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு எதிராக யூடியூப் தளத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் தவறியதாக முதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வலைப்பதிவாளர் ஒருவர் யூடியூப் தளத்தில் மறுபதிவேற்றம் செய்த உள்ளடக்கம் சட்டத்தை மீறியுள்ளதாக எம்சிஎம்சி கூறும் விவகாரம் தொடர்பில் இரண்டாவது வழக்கு தொடரப்பட்டுள்ளது.























