பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டியில் 376 மாணவர்கள் பங்குபெறுகின்றனர் என்று இப்போட்டி விளையாட்டின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான மேரு சாலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் க.சித்திரைச்செல்வன் தெரிவித்தார்.

இப்போட்டியில் கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த சிம்பாங் லீமா, மேரு சாலை, வாட்சன் சாலை, தாமான் செந்தோசா, புக்கிட் ராஜா, தெப்பி சுங்கை, ஜாலான் ஆக்கோப், பிராப்டன், பத்து அம்பாட், எமரெல்ட், காப்பார் மெதடிஸ்ட், ஹைலண்ட்ஸ், வலம்புரோசா, நோர்த் ஹம்மோக் ஆகிய தமிழ்ப்பள்ளிகள் இப்போட்டியில் பங்குப்பெற தங்களது போட்டியாளர்களை களம் இறக்கியுள்ளன. 4,5,6 ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த திடல்தடப் போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு வீசுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்பர் என செய்தியாளர்களிடம்  தெரிவித்த சித்திரைசெல்வன், கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான இப்போட்டியை நடத்துவதற்கு முக்கிய பங்காற்றியவரும் பிள்ளையார் சுழி போட்டவருமாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் திகழ்கின்றார் என அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டி விளையாட்டு குறித்து விளக்கமளித்த டாக்டர் குணராஜ் பேசுகையில், அன்று மலேசிய வரலாற்றில் விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்ப்பள்ளியில் இருந்து வந்தவர்கள். வளரும் இளம்பிஞ்சுகளின் ஆர்வம் தடைபடாமல் இருக்க இத்தகைய திடல்தடப் போட்டியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். நம்முடைய செயல்களைப் பார்த்து தற்போது பினாங்கு மாநிலத்திலும் இதுபோன்ற போட்டியை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர் எனக்கூறிய அவர், இது முதலில் மாவட்ட ரீதியிலும் பின்னர் மக்களின் எதிர்ப்பார்பிற்கு ஏற்ப மாநில அளவிலும் விரிவுப்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

27 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரையில் போட்டிகள் நடைபெறும். மினி சுக்மா போட்டி போல் கோலகலமாக அமையும் தொடக்க விழாவை  நீர், நில, இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தொடக்கி வைப்பார். 28 ஆம் தேதி காலை 8.00 மணி தொடக்கம் போட்டிகள் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் நிறைவுவிழா நடைபெறும் எனக்குறிப்பிட்ட ஜி.குணராஜ், வரலாற்றில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியை கண்டுகளிக்கவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கவும் பெற்றோர்களும் பொதுமக்களும் திரண்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here