‘தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டி 2023’ : கேமரன் மலை ரிங்லெட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஆனந்தராஜூ சிறந்த பயிற்றுனருக்கான விருதை வென்றார்

ராமேஸ்வரி ராஜா

கேமரன் மலை 

தேசிய அளவிளான தமிழ், சீன, தேசிய ஆரம்பப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகளுக்கான இயந்திரவியல் (ரோபோடிக்ஸ்) போட்டி 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதில் பஹாங் மாநில அளவில்  8 முறை தொடர்ந்து வெற்றியை தக்கவைத்தது மட்டுமின்றி, மாநிலத்தை பிரதிநிதித்து தேசிய போட்டிக்கு ரிங்லெட் தமிழ்ப்பள்ளியை பங்குபெறச்செய்த ஆசிரியர் செ. ஆனந்தராஜூ சிறந்த பயிற்றுனருக்கான விருதை வென்றுள்ளார். இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்கான பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த வேளையில், சிறந்த குழுவாகவும் வாகை சூடி தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பத்து பஹாட் ஜோகூர், துன் ஹுசைன் ஓன் பல்கலைக்கழகத்தில் 4 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெற்ற ‘தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டி 2023’  இறுதிப் போட்டியின் நிறைவு விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளாக  தொடர்ந்து  பஹாங் மாநில ரீதியில் தங்கத்தை வென்று  வந்த ரிங்லெட் தமிழ்ப்பள்ளி 8 ஆவது தடவையும் பதக்கத்தை வாகை சூடி ஒரே தமிழ்ப்பள்ளியாக தேசிய நிலை போட்டிக்கு தேர்வாகியிருந்தது. இப்பள்ளியில் படித்துச் சென்ற முன்னாள்  மாணவர்கள் இடைநிலைப் பள்ளி பிரிவில் தங்கத்தை வென்று தேசிய போட்டிக்கு தேர்வாகியிருந்தார்கள் எனபதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று தேசிய நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் இந்த முன்னாள் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்கான பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த வேளையில், சிறந்த குழுவாகவும் வாகை சூடி தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை பயிற்றுவித்ததில் பெருமை கொள்கிறேன் என மக்கள் ஓசைக்கு வழங்கிய தகவலில் ஆசிரியர் ஆனந்தன் குறிப்பிட்டார்.

STEM  எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்து நாட்டிலுள்ள இளைய தலைமுறையினரை அதிக அறிவாற்றல் மிக்கவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களாகவும், புதுமையானவர்களாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிப்புற நடவடிக்கைகளில் போட்டியிடக்கூடியவர்களாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்தை பிரதிநிதித்தும் ஒரு குழு போட்டியில் பங்குபெறுவார்கள். ஆக, ஆரம்பப்பள்ளி பிரிவின் ‘எதிர்கால கண்டுபிடிப்பாளர்’ போட்டியில் பஹாங் மாநிலத்தை பிரதிநிதித்ததோடு மட்டுமின்றி  பங்குபெற்ற ஒரே தமிழ்ப்பள்ளியாக ரிங்லெட் தமிழ்ப்பள்ளி பங்கெடுத்திருந்த நிலையிலும், கடுமையான போட்டிக்கு மத்தியிலும் 10 ஆவது இடத்தைப் பிடித்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் பங்களிப்பும், ஆசிரியர்களின் உழைப்பும், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஆதரவும் எங்கள் பள்ளியின் இதுபோன்ற சாதனைகளுக்கு காரணமாக இருக்கிறது. மகிழ்ச்சியான இந்த தருணத்தில் விருது பெற்ற ஆசிரியர் ஆனந்தனுக்கும், போட்டியில் பங்குபெற்று சாதனைப் படைத்த ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பள்ளியின் தலைமையாசிரியர் எல். தவமலர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here