86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை:

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது    சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தொண்டர்கள் கொட்டும் மழையில் மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த முரசொலி மாறனின் 86வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது. முரசொலி  மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.10 மணிக்கு முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த திமுகவினர் கலைஞர் புகழ் வாழ்க… அண்ணா புகழ் வாழ்க…. முரசொலி மாறன் புகழ் வாழ்க… என்று கோஷம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி, மத்திய சென்னை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம், கே.பி.பி.சாமி, தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா, எம்.கே.மோகன், ஆர்.டி.சேகர், கிருஷ்ணசாமி மற்றும் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், ரகுமான்கான்,  பகுதி செயலாளர்கள் அன்புதுரை, மதன்மோகன், மயிலை த.வேலு, ஏழுமலை, நந்தனம் மதி, அகஸ்டின்பாபு, ராமலிங்கம், பரமசிவம், காரப்பாக்கம் கணபதி, நொளம்பூர் ராஜன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, வட்டச் செயலாளர் பி.மாரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை ெசலுத்தினர். மேலும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

திருக்குவளை, திருவாரூர்: நாகை  மாவட்டம்  திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லம் உள்ளது. இங்கு தற்போது படிப்பகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உள்ள முரசொலி மாறனின் மார்பளவு சிலைக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அதேபோல் திருவாரூர் அருகே காட்டூரில் கருணாநிதி தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் உள்ளது. இங்கு முரசொலி மாறனின் உருவ படத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல் திருச்சி, கோவை, நெல்லை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியிலும் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here