பிரம்மாவுக்கு படைப்பின் ரகசியத்தை உபதேசித்த திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

நாகை மாவட்டம், திருக்கடையூர், ஆதிகடவூர் திருமயானம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில். மூலவர் பிரம்மபுரீஸ்வரர். தாயார் மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 48வது தலம்.

தல வரலாறு:

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் ரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார்.

பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.  பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும், திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன் ஆறு சீடர்கள் உள்ளனர். கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.

சிங்காரவேலர் சிறப்பு: 

வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலர் சன்னதி, விமானத்துடன் கூடிய தனி மண்டப அமைப்பில்  உள்ளது. இவர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்று சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் ராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். சிவசன்னதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, முருகனுக்கும் குக சண்டிகேஸ்வரர் உள்ளார்.

ஒட்டிய வயிறுடன் விநாயகர்:

விநாயகர், பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலில் இவர் ஒட்டிய வயிறுடன் பிரணவ விநாயகர்  காட்சி தருகிறார்.  ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர். படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம்  சொல்வதாக ஐதீகம்.   இங்கு திருக்கார்த்திகை, சிவராத்திரி, திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும். கோயில் காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பிரம்மபுரீஸ்வரரை வணங்கினால் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here