தொழிலாளர்களை பெர்கேசோவில் விரைந்து பதிவீர் மே 31 வரை மட்டுமே அவகாசம்

தி.மோகன்

கோலாலம்பூர்:

பெர்கேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தில் தங்களுடைய தொழிலாளர்களை தன்னார்வ முறையில் பதிவு செய்வதற்கு முதலாளி தரப்பினருக்கு வரும் 2024 மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களைப் பதிவு செய்து அவர்களுக்கு பெர்கேசோ சந்தா செலுத்துவதற்கு முதலாளி தரப்பினருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. வரும் மே 31ஆம் தேதி அது நிறைவு பெறுகிறது என்று பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் அஸிஸ் முகம்மட் நேற்று கூறினார்.

15ஆவது சீரமைப்பு மாதத்தை முன்னிட்டு இந்த அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெளிவுபடுத்தினார்.

வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள் தங்களின் தொழிலாளர்களை பெர்கேசோவில் பதிவு செய்து சந்தா செலுத்தியிருந்தால் அபராதம் விதிப்பது, நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது, தாமதமாக சந்தா செலுத்தியதற்கு வட்டி விதிப்பது போன்றவற்றைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொன்னார்.

முதலாளி தரப்பினர் Portal ASSIST எனும் ஆன்லைன் வழி பதிவு செய்யலாம். அல்லது நாடு முழுவதும உள்ள 54 பெர்கேசோ அலுவலகங்களுக்கு நேரில் சென்று இப்பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அல்லது 1-300-22-8000 என்ற எண்ணில் Careline PERKESO-வைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தச் சீரமைப்பு காலகட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள் தங்களின் தொழிலாளர்களை பெர்கேசோவில் பதிவதில் முதலாளி தரப்பினர் தோல்வி கண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

முதலாளி தரப்பினரின் அலட்சியப் போக்கை பெர்கேசோ இதற்குப் பிறகு சற்றும் சகித்துக்கொள்ளாது. சமரசம் காணவும் பெர்கேசோ முற்படாது. வரும் ஜூன் மாதம் அமல்படுத்தப்படவிருக்கும் ஓப்ஸ் கெசான் 2024 கீழ் சம்பந்தப்பட்ட முதலாளி தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை டத்தோஸ்ரீ முகம்மட் அஸ்மான் நினைவுறுத்தினார்.

தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம் என்பதைப் பொருட்படுத்தாது ஒரு தொழிலாளியைக் கொண்டிருந்தாலும் அந்தத் தொழிலாளியை பெர்கேசோவில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு 15ஆவது ஓப்ஸ் கெசான் அமல்படுத்தப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

1969 (சட்டம் 4) தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 4, 5 ஆகியவற்றின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொழிலையும் தொழிலாளர்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். அதேபோல் 2017 (சட்டம் 800) தொழில் காப்புறுதித் திட்ட சட்டம் பிரிவு 14, 16 ஆகியவற்றின் கீழ் முதலாளி தரப்பினர் தங்களது தொழிலையும் தொழிலாளர்களையும் பெர்கேசோவில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

இதனைச் செய்யத் தவறும் முதலாளி தரப்பினருக்கு அபராதம் விதிக்கப்படும். அல்லது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அபராதத் தொகையைப் பொறுத்தவரை செய்யப்படும் தவறுக்கு ஏற்ப 5,000ரிங்கிட்டிற்கு மேல்போகாத அபராதம் விதிக்கப்படும்.

இது தவிர ஆண்டுக்கு 6 விழுக்காடு சொக்சோ சந்தா தாமத வட்டியும் விதிக்கப்படும். ஒவ்வொரு தொழிலாளருக்கும் சந்தாத் தொகை தாமதமாகச் செலுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த வட்டி விதிக்கப்படும். பெர்கேசோவில் தொழிலாளர்களைப் பதிவு செய்யாமல் அவர்களுக்கு சந்தா செலுத்தத் தவறியிருந்தால் இந்த அபாரதத்தொகை விதிக்கப்படும். முதலாளி தரப்பைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று டாக்டர் அஸ்மான் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் கெசான் 14 திட்டத்திற்குப் பிறகு இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத முதலாளி தரப்பினர் 21.73 விழுக்காடாக இருந்ததை தரவுகள் சுட்டிக்காட்டின. 2022ஆம் ஆண்டில் அது 18.95 விழுக்காடாக இருந்தது.

இவர்களில் பெரும்பாலோர் கோவிட்-19 கொடுந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு சிறு அளவில் வணிகத்தை புதிதாக தொடங்கியவர்கள் ஆவர். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இடம்பெறுவது ஒவ்வொரு தொழிலாளரின் அடிப்படை உரிமையாகும். இதனை முதலாளி தரப்பினர் முறையாகத் தொழிலாளர்களைப் பதிவு செய்து சந்தா செலுத்துவது அவசியமாகும்.

புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை 1.55 மில்லியன் நிறுவனங்கள் பெர்கேசோவில் பதிந்துகொண்டுள்ளன. இந்த நிறுவனங்களுள் 600,819 நிறுவனங்கள் சந்தா செலுத்தி வருகின்றன. இவற்றுள் 12 மாத காலத்தில் குறைந்தபட்சம் ஒரு தடவை சந்தா செலுத்திய நிறுவனங்களும் உண்டு என்று டாக்டர் அஸ்மான் தெரிவித்தார்.

பூஜ்ஜியம் இலக்கை நோக்கி பெர்கேசோ பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. அதேபோன்று பணியிடத்தில் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படுவது, நோய்வாய்ப்படுவது போன்றவற்றில் பூஜ்ஜியம் இலக்கை பெர்கேசோ கொண்டிருக்கிறது எனவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here