ப.சிதம்பரம் கைதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனுக்குள் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் : 35 பேர் கைது; கூட்டம் இல்லாததால் சலசலப்பு

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார் 35 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டம் இல்லாததால் சலசலப்பு நிலவியது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவரை வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இது காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் போராட்டம் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அழைத்து செல்ல 20 வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், சத்தியமூர்த்தி பவனுக்கு பெரிய அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.  மூத்த மற்றும் முன்னணி தலைவர்கள் வராதது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் கே.எஸ்.அழகிரி, கைதானதால் அவர் நேற்று வரவில்லை. மூத்த தலைவர்கள் முன்னின்று ஆர்ப்பாட்டத்தை நடத்தாததால் கட்சியினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இந்நிலையில் மூத்த தலைவர் குமரிஅனந்தன், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவரது தலைமையில், தேசிய செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ செல்வபெருந்தகை, கோபண்ணா, மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசினா சையத், இரா.மனோகர், ஜி.கே.தாஸ், தாமோதரன், வக்கீல் செல்வம், எஸ்.கே.நவாஸ், மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகரன், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கைகளில் பேனரை ஏந்தியப்படி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டவாறு ஜி.டி.சாலைக்கு ஊர்வலமாக செல்ல தயாரானார்கள்.

போலீசார், பேரிகார்டுகளை வைத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மூத்த நிர்வாகிகள் சிறிது நேரம் சத்தியமூர்த்திபவன் வளாகத்திலேயே  ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, சத்தியமூர்த்தி பவனுக்குள் சென்று விட்டனர். ஆனால் ஒரு தரப்பினர் முண்டியடித்து கொண்டு வெளியேற முயன்றனர். அவர்களில் 10 பேரை மட்டும் போலீசார், வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ செல்வபெருந்தகை தலைமையில் 10 பேர் கைதானார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவு கூட்டம் கூடவில்லை. பெரிய அளவில் பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. இது சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘ஏன் கைதாகவில்லை’ என்று கூறி மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிதம்பரம் தரப்பினரும் தானாக கைதானார்கள். சிறிது நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகர் தலைமையில் ஒரு பிரிவினர், மீண்டும் கோஷம் போட்டு கைதானார்கள். மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி கட்சியினர் தனித்தனியாக கைதானதும், போராட்டத்தை முன்னின்று நடத்த யாரும் முன்வராதது காங்கிரசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

ஒதுங்கி கொண்ட முன்னணி தலைவர்கள்

கர்நாடகா அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்த காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவக்குமாரை, அமலாக்கத் துறை கைது செய்தது. இதை கண்டித்து கர்நாடகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அவரது சொந்த மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த அளவுக்கு காங்கிரசார் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ப.சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர். அவரது கைது சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைமை கடும் கண்டனத்தை தெரிவித்தும், தமிழகத்தில் பெரிய அளவில் காங்கிரசார் சார்பில் பெரிய அளவில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க முன்வராதது மர்மமாக உள்ளது. முன்னணி தலைவர்கள் யாரும் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி கொண்டது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here