ஸம்ரியின் மீதான வழக்கு: ஏஜிசியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஆகம அணி

கோலாலம்பூர்

மத போதகர் ஸம்ரி வினோத்தின் மீது சட்ட நடவடிக்கை இல்லையென சட்டத்துறை அலுவலகக்தின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென இந்து அமைப்புகளின் கூட்டணியான ஆகம அணி வலியுறுத்தியுள்ளது.

ஏஜிசியின் முடிவானது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஸம்ரி பேசப்பட்டதாகச் சொல்லப்படும் வீடியோ பதிவை முழுமையாக பார்த்த பின்னர், அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

ஸம்ரி இந்து மதத்தைத் தாக்கிப் பேசியதன் மீது இந்து சமய தலைவர் ஒருவரின் கருத்தைக் கேட்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ஏஜிசி அதில் முடிவெடுக்காமல் அதனை நீதிமன்ற முடிவுக்கு விட்டுவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

மதம் மாறி, சர்ச்சைக்குரிய மத போதகரும் இந்திய அரசினால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஸாக்கிர் நாயக்கின் சீடராகச் செயல்படும் ஸம்ரி, இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்து மத உணர்வைத் தூண்டி வருகிறார்.

ஏஜிசியின் ஜூலை 5 தேதியிட்ட கடிதம் செப்டம்பர் 5இல் வெளியிடப்பட்டதன் நோக்கம்தான் என்ன? அந்த முடிவானது இரண்டு மாதங்கள் கழித்து வெளியானதற்கு இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் ஏஜிசியின் திட்டமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த விசாரணையில், வேண்டுமென்றே இந்துக்களை அவமானப்படுத்தி, பொது அமைதிக்குக் கெடுதல் விளைவிப்பதற் கான குற்றவியல் சட்டம் பிரிவு 504 பயன்படுத்தாதன் காரணம் என்னவெனவும் அருண் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாத்தை தவிர்த்து மற்ற மதங்களைச் சிறுமைப்படுத்தும் வழக்குகளில் யாரையும் குற்றச் சாட்டுவதைத் தவிர்க்கும் போக்கு பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இவ்வாண்டு 9 மாதங்களில் இஸ்லாத்தை சிறுமைப் படுத்தும் வழக்குகள் 9 தொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கில், நபர் ஒருவருக்கு 9 ஆண்டு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையும் அருண் சுட்டிக்காட்டினார்.

அதே போன்று, மற்ற மதங்களைச் சிறுமைப் படுத்துவோர் மீதும் அம்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருண் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ஸம்ரி விநோத்தின் மீது குற்றம் சாட்டாமல் தவிர்த்திருப்பதை எதிர்த்து பேரரசரை சந்தித்து விளக்கமளிக்கவும், சட்டத்துறை அலுவலகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆகம அணி திட்டமிடுவ தாகவும் அருண் துரைசாமி அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here