புத்ராஜெயா
லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப் பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு சுங்கை பீலேக்கில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2019, செப்டம்பர் 1இல் தொடங்கின.இதன் ஆகக்கடைசியான நில வரங்கள் குறித்து விவாதிப்பதற்கு பள்ளி மேலாளர் வாரிய (எல் பிஎஸ்) பொறுப்பாளர்கள் நேற்றுக் காலை தம்முடைய அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்ததாக கல்வி துணைஅமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
இதற்கான நிதி ஒதுக்கீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்வி அமைச்சரால் வழங்கப்பட்டது. கூடுதல் நிதி கடந்தாண்டில் கல்வி அமைச்சரால் ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 43 லட்சம் வெள்ளி செலவில் புதிய இடத்தில் இப்பள்ளி நிர்மாணிக்கப்படுகிறது. 12 வகுப்பறைகளுடன் இதர அடிப்படை வசதிகளையும் அது கொண் டிருக்கும் என்று நி சிங் கூறினார்.
சுங்கை பீலேக்கில் 3 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்டிருக்கும் கட்டுமானப் பணிகள் 2020, ஆகஸ்டு 31ஆம் தேதி பூர்த்தியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுங்கை பீலேக் சீற்று வட்டாரத்தில் உள்ள இந்திய மாணவர்களின் கல்வித் தேவையை இப்புதிய பள்ளி நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு அயராது பாடுபட்டு வரும் பள்ளி மேலாளர் வாரியத்தை துணை அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.