பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி எப்போது கட்டி முடிக்கப்படும்?

ஜெலுபு  23 –

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஜெலுபு பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டடம் எப்போது கட்டி முடிக்கப்படும்? அந்தப் புதிய கட்டடத்தில் மாணவர்கள் எப்போது தங்களது கல்வியைத் தொடங்குவார்கள் என்று ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் (தே.மு) டத்தோ ஜலாலுடின் அலியாஸ் கேள்வி எழுப்பினார்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6.1 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடி மற்றும் மூன்று மாடிகள் கட்டடம் என இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கட்டுமானப் பணிகள் சுமார் 80 விழுக்காடு பூர்த்தி அடைந்த நிலையில் கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அத்தமிழ்ப்பள்ளியின் நிர்மாணிப்புப் பணிகளும் தடைப்பட்டது என்று ஜெலுபு அம்னோ தொகுதித் தலைவருமான டத்தோ ஜலாலுடின் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகள் இன்னும் 20 விழுக்காடே எஞ்சி உள்ளன.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இப்பள்ளி கட்டடப் பணிகள் அப்படியே கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் குறித்து நாடாளுமன்றத்தில் மூன்று முறை கேள்வி எழுப்பினேன்.

ஆனால் மாவட்ட கல்வி இலாகாவில் இது குறித்து முறையிடப்பட்டிருப்பதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று பதில் வந்தது. அதே சமயத்தில் கல்வி இலாகாவில் விசாரித்தால் கல்வி அமைச்சிடம் இருந்து இது குறித்து எந்தவொரு கடிதமும் வரவில்லை என்று பதில் சொல்லப்படுகிறது என்று டத்தோ ஜலாலுடின் கூறினார்.

ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு கண்டு வந்துள்ளேன். அவர்கள் என் தொகுதி வாக்காளர்கள். அவர்களை எந்த நிலையிலும் கைவிட மாட்டேன். மஇகா ஜெம்புல் தொகுதித் தலைவர் சுப்ரமணியம் தொகுதியில் உள்ள அனைத்து இந்தியர்களையும் எவ்வித பாகுபாடின்றி அரவணைத்துச் செல்ல வேண்டும். அனைத்து இந்தியருக்கும் தலைவர் என்ற முறையில் செயல்பாடு அமைந்திருக்க வேண்டும் என்று டத்தோ ஜலாலுடின் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here