மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

சமூகத்திற்கு, குறிப்பாக பி40 (குறைந்த வருமானம்) குழுவிற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்திவரும் மலிவுவிலை மதுபானத்தைத் தடை செய்ய சுகாதார அமைச்சு விரும்பவில்லை என மலேசிய மலிவுவிலை மது எதிர்ப்பு இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதன் செயல்பாட்டுத் தலைவர் டேவிட் மார்ஷல், அரசாங்கம் மலிவான மதுவைத் தடைசெய்யும் வரை அல்லது அந்தச் சமூகப் பிரச்சினையைத் தடுக்க சட்டங்களை அமல்படுத்தும் வரை இந்த இயக்கம் தொடர்ந்து போராடும் என்றார்.

“மலிவுவிலை மதுபானம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, பேரணி நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் விரைந்து செயல்படும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முறையீடு செய்ததால், பி.எச். அரசாங்கம், மலிவுவிலை மது விற்பனையை இரத்து செய்வதை நிறுத்தியதாக மார்ஷல் கூறுகிறார்.

“புதிய அரசு நிர்வாகத்தின் கீழ், மலிவுவிலை மது விற்பனையைத் தடை செய்யும் விதிமுறைகளை அமல்படுத்த இரண்டு முறை தாமதமானது.

“தற்போது, விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் முறையீடு செய்துள்ளதால், மலிவுவிலை மதுபான விற்பனை தடையைச் சுகாதார அமைச்சு இரத்து செய்துள்ளது,” என்று மார்ஷல் கூறினார்.

‘மலிவுவிலை மதுபான உற்பத்தியாளர்களின் முறையீட்டை அரசு ஏற்றுக்கொள்கிறது’

நேற்று, பட்டர்வெர்த்தில் நடந்த சுகாதார விழாவில், அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமதுவை சந்தித்தது.

டிசம்பர் 1, 2017 முதல் நடைமுறைக்கு வரவிருந்த மலிவுவிலை மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, உணவு சட்டம் 1983-ன் (திருத்தம் 2016) கீழ் கொண்டுவரப்பட்டப் புதிய விதிமுறைகளை அத்தன்னார்வ தொண்டு நிறுவனம் குறிப்பிட்டது.

மலேசியாவில் 30-க்கும் குறைவான மதுபான உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. ஆனால், தடையை அமல்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் முடிவை மாற்றியமைக்கும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கின்றனர் என்று மார்ஷல் மேலும் கூறுகிறார்.

“நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் … இது மற்றொரு பெரிய யு-டர்ன், ஆனால், இந்த முறை அது மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையை பாதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் ஒரு மரணம்

இந்த மதுவை அருந்துவதால், உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மக்கள் குறித்து யோசிக்க வேண்டுமென மார்ஷல் அமைச்சுக்கு அழைப்பு விடுத்தார்.

குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில், கிட்டத்தட்ட அன்றாடம் கல்லீரல் பாதிப்பு காரணமாக இறப்புகள் ஏற்படுவதாகவும் அவர் சொன்னார்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள், பி 40 குழுவைச் சார்ந்த இந்தியர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, மாநில அளவில், மதுவுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக மறுவாழ்வு மையங்களை அமைக்கவும் அமைச்சுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மதுபானங்களால் பாதிக்கப்பட்ட பி40 இந்தியர்களில், 100,000 தனித்து வாழும் தாய்மார்கள் இருப்பதாக, ஓர் ஆய்வின் தகவலையும் மார்ஷல் மேற்கோளிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்ற அவர், தற்போது சுமார் 20 முதல் 30 விழுக்காடு மாணவர்கள், சில்லறைக் கடைகளில் விற்கப்படும் பாட்டிலுக்கு RM5 முதல் RM30 வரையிலான மலிவுவிலை மதுபானங்களைக் குடிக்கத் தொடங்கிவிட்டனர் என்றார்.

உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

“இன்றுவரை, ஆயிரக்கணக்கான மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் அத்தகையக் கடைகள் மற்ற அத்தியாவசிய பொருட்களுடன் மதுபானங்களையும் விற்க முடியும்.

“இளையர்கள் தங்கள் பெற்றோர், பொதுமக்கள் அல்லது அதிகாரிகளுக்குத் தெரியாமல் அதை வாங்க முடியும்.

“மதுபான உரிமத்திலிருந்து கிடைக்கும் நிதியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மது அருந்துபவர்களின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

மதுபோதையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அபராதம் RM25 மட்டுமே

மதுபோதையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நபருக்கு எதிராக RM25-க்கும் குறைவான அளவிலேயே அபராதம் விதிக்கப்படலாம் என்ற தண்டனைச் சட்டத்தின் 510-வது பிரிவைத் திருத்தி அமைக்குமாறும் மார்ஷல் உள்துறை அமைச்சுக்கு அழைப்பு விடுத்தார்.

“பிரிவு 510-இன் கீழ், அபராதம் RM5,000 ஆகவும் சிறைதண்டனையை இரண்டு ஆண்டாகவும் உயர்த்த வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

14-வது பொதுத் தேர்தல் அறிக்கையில் பி.எச். அரசாங்கம், சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பி40, குறிப்பாக இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருப்பதாக மார்ஷல் கூறினார்.

“இப்போது அமைச்சர்களாக பணியாற்றும் பல தலைவர்களும் எம்.பி.க்களும் எங்கள் இயக்கத்தை ஆதரித்து, மலிவான மதுவிலக்குக்கான மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர், ஆனால் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here