சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் 5 லட்சத்திற்கான காசோலை

சென்னை – பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்த விபத்தில் குரோம்பேட்டை பவானி நகர் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதவி தொகையாக 5 லட்சத்திற்கான காசோலையை அவரது பெற்றோரிடம் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேனர் வைப்பது குறித்து தாக்கல் செய்த மனுவின் நகலை  சுபஸ்ரீயின் பெற்றோரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவருடன் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி., டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் ரஞ்சன், நாகலிங்கம் ஆகியோர் சென்றனர்.

பின்னர் வெளியில் வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த வாரம் ஆளும் கட்சியின் விளம்பர பலகை விழுந்து சுபஸ்ஸ்ரீ என்கிற சகோதரி அகால மரணம் அடைந்து இருக்கிறார். ‘இதுபோன்ற விளம்பரப் பலகைகளை திமுகவினர் வைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், காவல்துறையில் முறையாக அனுமதி பெற்று வைக்க வேண்டும். அப்படி மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நான் 2017ம் ஆண்டு செயல் தலைவராக பொறுப்பேற்ற நேரத்திலேயே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறேன்.ஆனால், இன்றைக்கு இருக்கும் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள், அனுமதி பெற்றுத் தான் பேனர்கள் வைக்க வேண்டும் என்று  உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தாலும், அதையும் மீறி ஒரு பெயரளவிற்கு ஒன்றிரண்டு விளம்பரப் பலகைகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுக் கொண்டு நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகளை முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தாலும் வழிநெடுக போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு தரும் வகையில் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றமும் தொடர்ந்து இதுகுறித்து கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரப் பலகை கலாச்சாரம், ஏற்கனவே கோவை மாவட்டத்தில் ரகு என்கிற சகோதரனை பலி கொண்டது. இப்போது சுபஸ்ஸ்ரீ என்கிற ஒரு சகோதரியை பலி கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

சகோதரி சுபஸ்ரீயை இழந்து வாடும் அவருடைய தந்தை- தாய் ஆகியோரை நான் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறேன். என்னதான் நான் ஆறுதல் கூறினாலும், அவர்களுடைய மனது ஆறுதல் அடையாது என்பது எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், முடிந்த வரையில் அவர்களை நாங்கள் ஆறுதல்படுத்தி இருக்கிறோம்.
அவருடைய தந்தை ரவி என்னிடத்தில், ‘என்னுடைய மகள் சுபஸ்ஸ்ரீ விளம்பர பலகைகள் கலாச்சாரத்தால் இறந்துள்ளார். இதுவே கடைசியாக இருக்கட்டும். இது தொடரக் கூடாது, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று உணர்ச்சியோடு சொன்னது மறக்க முடியாதது.

நான் நேற்று முன்தினம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில், நாங்களே முன்சென்று அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறோம். திமுகவின் சார்பில் நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எந்த ஒரு விளம்பரப் பதாகைகளையும் வைக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறோம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அடையாளத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரம் வைத்துவிட்டு, அந்த நிகழ்ச்சியை நடத்திட வேண்டும். அதை மீறி யாராவது வைத்தால், நாங்களே அதற்குரிய நடவடிக்கை எடுப்போம் என்று நான் அறிவித்தது மட்டுமல்ல, நீதிமன்ற மனுதாக்கலிலும் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.

விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. சுபஸ்ரீயை இழந்து வாடிக்கொண்டிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில், திமுக அறக்கட்டளையிலிருந்து 5லட்சம் அவரின் குடும்பத்தாருக்கு உதவித்தொகையாக நாங்கள் வழங்கியிருக்கிறோம். என்னதான் உதவித்தொகை வழங்கி இருந்தாலும் அந்த குடும்பம் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு திமுக துணை நிற்கும் என்ற உறுதியை எடுத்துச் சொல்லி, அவருடைய தாய், தந்தைக்கு என்னுடைய ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்  கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் சுபஸ்ரீயின் தந்தை ரவி  நிருபர்களிடம் கூறுகையில், “திமுக தலைவருடைய வார்த்தை எங்களுக்கு மிகுந்த  ஆறுதல் அளிக்கிறது. மிகுந்த வேதனையில் இருந்தாலும் தலைவருடைய வார்த்தை  கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்  கொள்கிறோம்” என்றார்.

அதிமுக பிரமுகரை கைது செய்யாமல் நாடகம் நடத்துகின்றனர் நிருபர்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: விளம்பரப் பலகை வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவார காலமாகியும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நினைத்தால், அடுத்த வினாடியே அவரை கைது செய்யலாம். ஒரு நாடகத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here