சுங்கை பூலோ சமூக, பள்ளி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

சுங்கை பூலோ பகுதியில் ‘மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமம்’ (Program Kampung Angkat Madani) மற்றும் ‘மடானி தத்தெடுக்கப்பட்ட பள்ளி’ (Program Sekolah Angkat) ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சு வாயிலாக மடானி அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டங்கள் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படுவதை மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) ஒருங்கிணைத்து கண்காணிக்கும்.

இது குறித்து மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் கூறுகையில், கம்போங் லாடாங் சுபாங்கில் மேற்கொள்ளப்படும் மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமத் திட்டத்திற்கு 5 லட்சம் ரிங்கிட் நிதியும், புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளியில் செயல்படுத்தப்படும் தத்தெடுக்கப்பட்ட பள்ளித் திட்டத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் நிதியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீடு நிதியமைச்சால் வழங்கப்பட்ட கூட்டரசு அரசாங்கத்தின் நிதியுதவி என்றும், திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே மித்ராவின் முதன்மைப் பணி என்றும் அவர் விளக்கமளித்தார். மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமத் திட்டத்தின் கீழ், கம்போங் லாடாங் சுபாங்கில் சாலைகளை மறுசீரமைத்தல், வடிகால் அமைப்பை மேம்படுத்துதல், கிராமத்தின் அடையாளச் சின்னத்தை நிறுவுதல், சுற்றுவேலியை பழுதுபார்த்தல், தூய்மைப் பணிகளை முன்னெடுப்பதுடன், நீர் விநியோகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் முக்கிய இடங்களில் சூரியசக்தி தெருவிளக்குகளை நிறுவுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இப்பகுதிகளின் அடிப்படைத் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட அரசு முகமைகள் மற்றும் கிராமப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாய்வுகளுக்குப் பிறகே இத்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டதாக ரவீந்திரன் நாயர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 லட்சம் ரிங்கிட் நிதியானது, மாணவர்களுக்கும் பள்ளிச் சமூகத்திற்கும் சீரிய கற்றல் சூழலை உருவாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும்.

மக்களின் தேவைகளையும் சிக்கல்களையும் கண்டறிந்து, அவற்றுக்கான உரிய தீர்வுகளை அரசாங்கத்தின் பரிசீலனைக்கு மித்ரா தொடர்ந்து முன்வைத்து வருகின்றது. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களைச் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அமலாக்க முகமைகளுடன் இணைந்து மித்ரா திறம்படக் கண்காணிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். நிதியமைச்சால் வழங்கப்படும் நிதியானது சமுதாயத்தின் நல்வாழ்வுக்காகவும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை மித்ரா தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here