உலகை உலுக்கும் புது டெக்னாலஜி

‘வருங்காலமே  ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (Internet of Things) என்கிற டெக்னாலஜியின் கையில்தான் இருக்கப்போகிறது…’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்? கம்ப்யூட்டரில் டேட்டாக்களைச் சேகரித்து நமக்கு வேண்டியபோது அதை எடுத்து பயன்படுத்துகிறோம். இதுதான் இப்போதைய வழக்கம். இதுவேதான் மாறவும் போகிறது. ஆம்; மெஷின்களே இன்டர்நெட்டில் இருந்து இனி தானாகவே டேட்டாக்களை சேமித்துக் கொள்ளும். மெஷினும் மெஷினும் பேசிக் கொள்ளும். முத்தமிட்டு காதலிக்கத் தொடங்குமா, டேட்டிங் செல்லுமா என்று தெரியவில்லை. ஆனால், தங்களுக்கிடையில் தகவல்களை, ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளும். இதற்காகவே பயோசிப் டிரான்ஸ்பாண்டர்கள், சென்சார்கள் அனைத்து மெஷின்களிலும் பொருத்தப் படும். இப்படி சீவி சிங்காரிக்கப்பட்ட மெஷின்கள் சார்ந்த நெட்வொர்க்ஸ்தான் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’.

கம்ப்யூட்டர் மாதிரி நம்ம வீட்டு வாசலில் இருக்கும் வேப்ப மரம் முதல், அமெரிக்க அதிபரான டிரம்ப் வீட்டு நாய்க்குட்டி வரை சகலமும் ‘நெட்’டில் இணைக்கப்படும். ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்விட்சை தட்டினால் அமெரிக்காவில் பல்பு எரியும். கண்ணை சிமிட்டினால் வீட்டிலுள்ள ஃபேன் சுற்றும். உலகிலுள்ள எந்தப் பொருளையும், எங்கிருந்து வேண்டு மானாலும் யாரோ ஒருவரால் இயக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஆதார் எண் போல ஒவ்வொரு பொருளுக்கும் தனி அடையாளம் இருக்கும்.  இதுவரை 600 கோடி கேட்ஜெட்ஸ் இப்படி இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இணைப்பின் எண்ணிக்கை 2020ல், 3000 கோடியாக அதிகரித்திருக்கும்.இதை மனதில் வைத்தே பெரும் நிறுவனங்கள் அனைத்தும் கேட்ஜெட்ஸை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றன.

சிந்திக்கும் ஆற்றல் மனிதனிடம்தானே இருக்கின்றது என அசால்ட்டாக இருக்காதீர்கள். கேட்ஜெட்ஸில் செயற்கை அறிவை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்! இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐசியூவில் இருக்கின்ற ஒருவருக்குத் தேவையான உதவியையும் செய்ய முடியும். அவரது மூச்சையும் நிறுத்த முடியும். டிராபிக் நேரத்தில் நம் வண்டி தானாகவே நிதானத்துக்கு வந்துவிடும். பைக் அல்லது காரின் எரிபொருள் தீரப் போகிறது என்றால் உடனே அலர்ட் சிக்னலை வண்டி கொடுக்கும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கிருக்கிறது… அங்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதையும் சொல்லிவிடும். ‘நான் காலாவதியாகிவிட்டேன். என்னைக் குடிக்காதே’ என்று கூல்டிரிங்ஸ் முதல் மருந்து வரை அனைத்து பொருட்களும் நம்மை எச்சரிக்கும்.

எந்தப் பொருளின் விலை எந்தக் கடையில் குறைவு என்பதை பொருட்களே சொல்லும். வீட்டில் இருக்கும் முதியவர்களை நம்மால் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கவும் முடியும். தேவையான உதவிகளைச் செய்யவும் முடியும்.  பறக்கும் கார்கள் வந்துவிடும். எல்லா வாகனங்களுமே தொடர்பிலும் கட்டுப்பாட்டிலும் இருப்பதால் 90% விபத்துகள் தடுக்கப்படும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில மைனஸ்களும் இதில் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம். ஹேக்கர்களின் தாக்குதல் சுனாமியை விட கடுமையாக இருக்கும். அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகும். ஒரு சிட்டி யின் மொத்த பவர் சப்ளையைக் கூட மூன்று மாதங்களுக்கு ஹேக்கர்களால் நிறுத்தி வைக்க முடியும்.  நம் கையில் கட்டியிருக்கிற வாட்ச் முதல் ஃபிட்னஸ் கேட்ஜெட்ஸ் வரை அனைத்தும் நம்முடைய ரகசியங்களை, இருக்கும் இடத்தை கசிய விடும். பிரைவசி என்ற சொல்லே டிக்‌ஷனரியில் இருந்து மறைந்து
விடும்.

நாம் எவ்வளவு பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கினாலும் அது நம் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்காது. 24 X 7 மின்சாரமும், இணைய வசதியும் தேவைப்படும். இதனால் மின் பற்றாக்குறை ஏற்படும். இயற்கைச் சீற்றங்களால் முன்பைவிட அதிக அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருட்களுக்கும் அறிவு வந்துவிடுவதால் மனிதனை அவையே அடக்கி ஆளும். வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன் முதல் ரௌட்டர் வரை அனைத்துக்கும் புதிதாக லாக் இன் கிரியேட் செய்து, யாராலும் கண்டு பிடிக்க முடியாதபடி யூசர் நேமையும், ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டையும் செட் செய்யவேண்டும். அடிக்கடி  இதை மாற்றுவது நல்லது. இப்போதைக்கு இதுமட்டும்தான் தப்பிக்க ஒரே வழி. இந்தியாவுக்குள் 2025-இல்  இதன் ஆதிக்கம் ஆரம்பிக்கும் என்பதுதான் நமக்கிருக்கும் ஒரேயொரு ஆறுதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here