தோட்டங்களில் மாடுகள் வளர்க்கத் தடையா ? 200 பண்ணையாளர்கள் போராட்டம்

புத்ராஜெயா – தோட்டங்களில் மாடுகளை வளர்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுமார் 200 பண்ணையாளர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.நான்கு தலைமுறைகளாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சைம் டார்பி தோட்டங்களைச் சேர்ந்த இவர்கள் அந்தத் தடையை எதிர்த்துப் போராடி வருகின்றனர். மாடுகள் வளர்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அவர்கள் புத்ராஜெயாவில் உள்ள விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சில் நேற்று கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர்.

இந்தக் கோரிக்கை மனுவை அமைச்சு நியாயமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று தேசிய கால்நடை பண்ணையாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் விஜயகாந்தி இராமசாமி தெரிவித்தார். நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அமைச்சருக்கு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

அமைச்சர் சீனா சென்றுள்ள நிலையில் அவருடைய சிறப்புச் செயலாளர் சுலைமானிடம் அந்தக் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது என்று காந்தி குறிப்பிட்டார். இந்தக் கோரிக்கை மனு அமைச்சர் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் எனவும் தீர்வு காண்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் சுலைமான் தெரிவித்துள்ளார்.

சைம் டார்பி தோட்டங்களில் மாடுகள் வளர்க்க விதிக்கப்பட்ட தடை எங்களுக்கு மனவேதனையைத் தந்துள்ளது என்று மலாக்கா, புக்கிட் அசகானைச் சேர்ந்த நாராயணசாமி, புக்கிட் பிளாண்டோக் குமாரி பெருமாள், கோலசிலாங்கூர் இராமச்சந்திரன் பெருமாள், காப்பார் யோகேந்திரன் சுரேஷ், மலாக்கா ஹல்மி, பெருமாள் சுப்பிரமணியம், சரவணேஷ் பத்தினிசாமி, நல்லத்தம்பி ராஜு, பெருமாள் ராஜு, முகமது ஹனிஷ் உள்ளிட்ட கால்நடைப் பண்ணையாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

மாடுகளைத் தோட்டங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திடீரென வெளியே போகச் சொன்னால் மாடுகளுடன் நாங்கள் எங்கே போவது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.மாடுகளைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றத் தவறும் பண்ணையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என முழக்கமிட்டு நேற்று சுமார் 200 பேர் அமைச்சுக்கு முன்புறம் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நாட்டின் இதர மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை உள்ளது என்று பிஎஸ்எம் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்தார்.
கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு நல்ல தீர்வு காண வேண்டும். கால்நடை வளர்ப்பு மூலம் குடும்பச் செலவைச் சமாளிக்க வருமானம் ஈட்டுவோர் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினையை அரசாங்கம் கடுமையாகக் கருத வேண்டும் என்று அவரும் பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜனும் கோரிக்கை விடுத்தனர்.

– எம். அன்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here