நாட்டில் வறண்ட காலநிலை நீடித்ததால் விளைச்சல் அதிகம்: காய்கறி விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

ஜார்ஜ் டவுன்:

வடமலேசியாவில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாலும் காய்கறி, மீன் பண்ணையாளர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெயிலில் பயிர்கள் வாடிப்போய் விளைச்சல் குறைவதற்குப் பதிலாக, வறண்ட பருவம் நீடித்ததால் அவர்களுக்கு விளைச்சல் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

மேலும் மொத்த விற்பனையாளர்கள் விலையைக் குறைத்திருப்பதால் சில்லறை விற்பனையாளர்களுக்கும் மகிழ்ச்சி.

பத்து லன்சாங் சந்தையில் காய்கறிக் கடை நடத்தும் எஸ் காயத்ரி கூறுகையில், “காய்கறிகளின் விலை குறைந்ததால் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நாங்களும் விலையை மாற்றியமைக்க முடியும்,” என்றார்.

“விலை அதிகமாக இருந்தால், தேவை குறையும். வாடிக்கையாளர்கள் குறைவாகவே வாங்குவர். அதனால் காய்கறிகள் வீணாகக்கூடும். அப்போது எங்களுக்கு மொத்தமாக நட்டம் ஏற்படும்,” என்றார் அவர்.

சீனப் புத்தாண்டு காலகட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 8 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டதாகக் கூறிய அவர், இப்போது பாதி விலைக்கு விற்பதாகக் கூறினார்.

ஒரு கிலோ மிளகாய் முன்னர் 20 முதல் 22 ரிங்கிட் வரை விற்பனையானது. இப்போது அது 14 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது என்று காயத்ரி கூறினார்.

அதிகரித்துள்ள வெயில், பயிர்களைக் கருக்கிவிடாமல் அவை நன்றாக வளர உதவியுள்ளது என்று காய்கறி விற்பனையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் லீ கா ஷியூவான் கூறினார்.

மேலும் நாடு முழுவதும் உள்ளூர்க் காய்கறிகளின் விலை குறைந்திருப்பதை அவர் சுட்டினார்.

இந்நிலையில், உள்ளூர் மீன் வகைகள், இறால்கள் என அனைத்துமே தேவைக்கு அதிகமாகவே கிடைப்பதாக மீன் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ கொடுவா மீன் 10 அல்லது 11 ரிங்கிட்டிற்கும் அரைக் கிலோ இறால் 18 முதல் 35 ரிங்கிட்டிற்கும் விற்பனையாவதாக அவர்கள் கூறினர்.

இன்னும் சில மாதங்களுக்கு மீன் விலை அதிகரிக்காது என்றும் போதிய அளவில் மீன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான வானிலை மீன் வளர்ப்பிற்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here