ஈப்போ:
கடந்த ஜூலை மாதம் தனது இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பேராக் மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினரான யோங் சூ கியோங்கின் வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடத்த ஈப்போ அமர்வு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
நீதிபதி நோராஷிமா காலிட் இன்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கின் மறு வாசிப்பின் போது இந்த முடிவை அறிவித்தார்.
யோங் மீது தண்டனைச் சட்டம் 376-வது பிரிவு கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர் தாம் குற்றவாளி அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜூலை 7-ஆம் தேதி இரவு 8.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை மேரு கிராம பூங்காவில் உள்ள தனது வீட்டின் மாடி அறையில் இந்த குற்றத்தை செய்ததாக ட்ரோனோ மாநில சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தால் நியமிக்கப்பட்ட குடும்ப வழக்கறிஞர் கேப்ரியல் சுசாயன், இந்த வழக்கில் அரசியல் தலையீடல் இருப்பதாக கூறிய பணிப்பெண்ணின் குடும்பத்தினரிடம் காவல் துறையில் புகார் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.
“கடந்த வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவரின் தாயை நான் சந்தித்தேன். பாதிக்கப்பட்டவரை கூடிய விரைவில் நான் சந்திப்பேன். பாதிக்கப்பட்டவரைப் பார்க்க விரும்பும் சில வழக்கறிஞர்கள் உள்ளனர், ஆனால் அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் அவரது நலனைப் பாதுகாக்க வேண்டும்“என்று அவர் நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
23 வயதான இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில், உண்மை நிலைநிறுத்தபப்டும் என்று நம்புவதாக இந்தோனிசிய தூதரகம் தெரிவித்துள்ளது.