4ஆவது முறையாக சபா சுற்றுலாத் துறை விருது வென்று ஏர் ஆசியா சாதனை

எஸ்.வெங்கடேஷ்

கோத்தா கினபாலு, டிங்.3-
அண்மையில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டிற்கான சபா மாநில சுற்றுலாத் துறை விருது நிகழ்வில் ஏர் ஆசியா நிறுவனம் சிறந்த கூட்டாளர் விமான நிறுவனத்திற்கான விருதினை வென்றுள்ளது.

கடந்த 2 வருடங்களாக சபா மாநிலத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதில் பெரும் பங்கினை ஆற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி ஏர் ஆசியா நிறுவனம் இந்த விருதினை தொடர்ந்து 4 ஆண்டுகளாக வென்று சாதனை படைத்துள்ளது.

நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட சபா மாநில துணை முதல்வரும் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான டத்தோ கிரிஸ்டியனா லியு இவ்விருதினை வழங்கினார்.

அமைச்சரிடமிருந்து ஏர் ஆசியா குழுமம் சார்பாக அதன் கிழக்கு மலேசிய வணிகப் பிரிவு தலைவர் நூர் ஹயாத்தி அஸிஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், மலேசியாவில் கோலாலம்பூரை அடுத்து ஏர் ஆசியாவின் இரண்டாவது பெரிய மையமாக கோத்தா கினபாலு திகழ்கிறது.

இந்த மையத்தில் தற்பொழுது 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு இம்மாநிலத்தைச் சேர்ந்த 452 பேர் பணி புரிகின்றனர்.
இதனையடுத்து சண்டக்கான், தாவாவ் ஆகிய நகரங்களிலும் ஏர் ஆசியாவின் சேவையில் பெரும் திட்டத்தை வழிவகுத்து வருகின்றோம்.
சபா – ஆசிய நாடுகளுக்கிடையிலான பயண உறவை விரிவுப்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளோம் என ஏர் ஆசியா நிறுவனத்தின் மலேசியாவிற்கான தலைமை செயல் அதிகாரி ரியாட் அஸ்மாட் கருத்துரைத்தார்.

மேலும் இம்மாநில மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் பெரும் ஆதரவின் அடையாளமாக இந்த விருது திகழ்கின்றது. இம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமைக் கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here