ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸாக நடிக்கும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், `சும்மா கிழி’ பாடல் போன்றவை அடுத்தடுத்து வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து நேற்று தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மும்பையில் நடந்த இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், சுனில் ஷெட்டி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தர்பார் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பிறகு அந்தப் படத்தின் அனுபவத்தையும் அதில் பணியாற்றியவர்களைப் பற்றியும் ரஜினிகாந்த் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
“காவலர் வேடத்தில் நடப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஏனெனில் காவலர்கள் என்றால் எப்போதும் சீரியஸாகவே இருக்க வேண்டும், குற்றவாளிகள் பின்னால் ஓட வேண்டும், அதில் நிறைய பொறுப்புகள் உள்ளது. ஆனால் நான் மக்களை மகிழ்விக்க வேண்டும் என நினைக்கிறேன். அதன் காரணமாகவே இது போன்ற கேரக்டர்களை பொதுவாக நான் ஏற்பதில்லை.
முருகதாஸ் வித்தியாசமான கதையுடன் வந்தார், நான் போலீஸாக நடித்த மூன்றுமுகம் படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் சிறந்த பெயரைப் பெற்றுத்தந்தது. அதேபோல் தர்பாரில் வரும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்தை முருகதாஸ் வேறு ஒரு கோணத்தில் வடிவமைத்துள்ளார். இது வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் அல்ல, அவரது கற்பனை மற்றும் காட்சிப்படுத்தும் விதம் வேறுபட்டவை.
நான் இதுவரை 160 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன். 40-45 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். ஆனால் இதுவரை திருநங்கையாக நடித்ததில்லை, அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை. மேலும் மராட்டியப் படத்திலும் நடக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இன்றும் கூட இவ்வளவு வேலை செய்ய எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருப்பது ஆர்வம்தான். அதுதான் என்னை வழிநடத்துகிறது, அதுவே எனக்கு முழு ஆற்றலையும் வழங்குகிறது.

நான் மாறிவிட்டேன் என்று நினைக்கவில்லை. நான் திரைத்துறையில் நுழையும் போது மிகவும் வெட்கமாகவும் பதற்றமாகவும் இருந்திருக்கலாம். அது அனைத்தும் இயக்குநரைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். நான் ஒரு இயக்குநரின் நடிகன் மட்டுமே, அவர் கொடுக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடிக்க வேண்டும். அதற்கும் மேலாக நான் நானாகவே உள்ளேன் மாறிவிட்டேன் என நினைக்கவில்லை.
80-களின் முற்பகுதியில் எனது ஒரு படம் வெளியாகி நல்ல வசூலை எட்டியது. அப்போது ஒரு தியேட்டரில் என் பெயர் வரும்போது ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று இடம் பெற்றிருந்தது. நான் உடனடியாக தயாரிப்பாளரை அழைத்து என்னிடம் கூட கேட்காமல் எப்படிப் பெயர் வைக்க முடியும் என்று கேட்டேன். அதைப் பார்த்ததும் எனக்கு பெரும் சங்கடமாக இருந்தது. மக்கள் என்னை ‘சூப்பர் ஸ்டார்’ என அழைப்பார்கள் என்று எப்போதும் நான் நினைத்ததில்லை. இப்போதும் ஏன் அப்படி அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. உண்மையில் நான் சூப்பர் ஸ்டாரா என எனக்கே தெரியவில்லை
வெள்ளித் திரை மற்றும் திரைக்குப் பின் என இரண்டிலுமே அமிதாப் பச்சன்தான் என் உத்வேகம். எனக்கு 60 வயது ஆகும்போது மூன்று அறிவுரைகளைக் கூறி அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு கூறினார். ஒன்று உடற்பயிற்சி செய்வது, இரண்டாவது எப்போதும் நம்மை பிஸியாக வைத்திருக்க வேண்டும் என்பது மூன்றாவது அரசியலில் நுழையக்கூடாது. அவர் கூறிய முதல் இரண்டு விஷயங்களை நான் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால், சில காரணங்களால் மூன்றாவது விஷயத்தை என்னால் பின்பற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய குடியுரிமை சட்டத் திருத்த நீக்கப் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, “இது திரைத்துறை மேடை இங்கு அரசியல் பேசவிரும்பவில்லை. எனது கருத்துக்களை வேறு மேடையில் வெளிப்படுத்துவேன், இங்கே இல்லை” என மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.