‘ஜெயம்’ ரவிக்குள்ளே ஒரு இயக்குநர்!

“ராஜா இயக்கத்தைத் தவிர மற்ற இயக்குநர்களோடு ரவி நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?’’

“அப்பா எடிட்டர், அண்ணன் இயக்குநர், நான் நடிகன் – இப்படித்தானே உங்களுக்குத் தெரியும்? எங்க அம்மாவும் அப்பாவும் எழுத்தாளர்கள்னு தெரியுமா?” – ஆச்சர்யம் விதைக்கும் கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ‘ஜெயம்’ ரவி.

“ஆமாங்க. அப்பா தன்னோட வாழ்க்கையையே ‘தனி மனிதன்’ என்னும் புத்தகமா எழுதியிருக்கார். அதைப் படமா எடுக்கிற ஐடியாவும் இருக்கு. அதில் அப்பா வேடத்தில் நடிக்க ரவிதான் பொருத்தமா இருப்பான்” என்கிறார் மோகன் ராஜா.

எடிட்டர் மோகனின் சிறுவயதுப் புகைப்படம் தொடங்கி அவரது கடைசிப் பேரனின் சிறுவயதுப் புகைப் படம் வரை சுவரை அலங்கரித்திருக் கின்றன. மோகன், அவரின் மனைவி வரலட்சுமி, மகன்கள் இயக்குநர் மோகன் ராஜா, `ஜெயம்’ ரவி, மகள் ரோஜா என ஒட்டுமொத்தக் குடும்பத்தின் உற்சாகக் கூடல் இது.

“எனக்கு எங்க அப்பா எப்போதுமே ஆச்சரியம்தான். திரைக்கதை ஆசிரியரா படத்தோட டிஸ்கஷனில் உட்கார்ந்து சீன் சொல்லுவார். ஒரு தயாரிப்பாளரா அந்த சீனை நல்லா எடுக்கணும்னு ஃபைனான்ஸ் செய்து எங்களை ஷூட்டிங்கிற்கு அனுப்புவார். ஒரு எடிட்டரா எடிட்டிங்ல உட்காரும் போது, எவ்வளவு பிரமாண்டமா ஒரு சீனை எடுத்திருந்தாலும், அது அந்தப் படத்துக்குத் தேவையில்லைன்னா தயவு தாட்சண்யம் காட்டாம தூக்கிடுவார்” என்றவர், “அம்மா, நீங்க எழுதின புத்தகம் பத்தியும் சொல்லுங்க” என்றார் .

“சின்ன வயசுல இருந்தே திருக்குறள் மேல எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நாள் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தைப் பற்றி எனக்குத் தோணுன விஷயங்களை வைத்து எழுதி, என் கணவர்கிட்ட கொடுத்தப்போ, ’நல்லாருக்கே. இதை நீ எல்லா அதிகாரத்துக்கும் எழுதலாமே’ன்னு சொன்னார். முதலில் அறத்தை வலியுறுத்தலாம்னு நினைச்சு, திருக்குறள்ல இருக்கிற அறத்துப்பாலோட 38 அதிகாரத் தையும் 33 அதிகாரங்களாக எழுதி, `வேலியற்ற வேதம்’னு பெயர் வெச்சு, புத்தகமா ரிலீஸ் பண்ணியிருக்கேன்’’ என்கிறார் பெருமிதமாக.

“இவ்வளவு சிந்திக்கிற நீங்க, உங்க பசங்களுக்குப் பேர் வைக்கிறதுக்கு சிரமப்படவே இல்லையே. ராஜா, ரோஜா, ரவின்னு ரொம்ப சிம்ப்ளா வெச்சுட்டீங்களே’’ என்று கேட்டதும், மோகன் பதிலளிக்க ஆரம்பித்தார்.

“நான் முஸ்லிம், என் மனைவி இந்துங்கிறதனால, எங்களுக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு எந்த மதப்படி பெயர் வைக்கிறதுன்னு தெரியலை. பொதுவான பெயரா வெச்சிடலாம்னு முதல் ரெண்டு குழந்தைகளுக்கும் ராஜா, ரோஜான்னு பெயர் வெச்சோம். மூணாவது குழந்தைக்குப் பெயர் வைக்கும் போதுதான், `யார் என்ன நினைச்சால் என்ன’ன்னு ரவின்னு பெயர் வெச்சோம்’’ என்கிறார் மோகன்.

“பெயரில் மட்டுமல்ல, வாழ்க்கை யிலும் எங்க அப்பா, அம்மா இந்த மதத்தைத்தான் ஃபாலோ பண்ணணும், அந்த மதத்தைத்தான் ஃபாலோ பண்ணணும்னு சொன்னதே கிடையாது. இதுவரைக்குமே எந்த ஒரு மதத்தையும் சார்ந்து இருக்காம, மதமில்லாக் குடும்பமாகத்தான் நாங்க இருக்கோம்’’ என்று ராஜா சொல்ல, புன்னகைத்து ஆமோதிக்கிறார்கள் ரவியும் ரோஜாவும்.

“உங்களை அதிகமாக யார் கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. ராஜாவா, ரவியா’’ என ரோஜாவிடம் கேட்டதும், “ரவிதான். நான் எது பண்ணுனாலும் என்னைக் கிண்டல் பண்ணிட்டேதான் இருப்பான். ஆனால், அந்த கிண்டலையே ரொம்ப மரியாதையா பண்ணுவான். `அக்கா வாடி’, `அக்கா போடி’ன்னுதான் சொல்லுவான். அப்பாகிட்ட எதாவது சொல்லணும்னா, இல்லை எதுக்காவது பர்மிஷன் வாங்கணும்னா என் மூலமாகத்தான் ரெண்டுபேரும் சொல்லுவாங்க. நானும் அப்பாவுக்குச் செல்லம்கிறதால அவர்கிட்ட பேசி ஓகே பண்ணிடுவேன். சின்னச்சின்ன விஷயங்களில் இருந்து அவங்க கல்யாணம் வரைக்கும் இப்படித்தான் நடந்திருக்கு’’ என்கிறார்.

“உங்க படங்களில் வர அப்பா, அம்மா கேரக்டர்களில் ரியல் அப்பா, அம்மாவோட சாயலைக் கொண்டு வருவீங்களா’’ என ராஜாவிடம் கேட்டதும், ‘‘என்னுடைய எல்லாப் படங்களிலும் எங்க அப்பா, அம்மா சாயல் இருக்கும். அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி சென்டிமென்ட் சீன்ஸ் வந்துச்சுன்னா, அதில் கண்டிப்பா எங்க வீட்டுல நடந்த சம்பவம், நாங்க பண்ற விஷயங்கள் வந்திடும்’’ என ராஜா சொன்னதும், தொடர்ந்த ரவி, “ ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ அப்பா மாதிரிதான் எங்க அப்பாவும். எங்களுக்கு என்ன வேணுமோ அதை நாங்க கேட்குறதுக்கு முன்னாடியே வாங்கிக் கொடுத்திடுவார். அந்தப் படத்தோட க்ளை மாக்ஸில் நான் நடிக்கும் போது, என் முன்னாடி பிரகாஷ் ராஜ் சார் இருக்காருன்னு நினைக்கவே இல்லை. என் முன்னாடி என் அப்பா இருக்காருன்னு நினைச்சு தான் நடிச்சேன். எங்களுக்கான பெஸ்ட் எதுன்னு தேடித் தேடி வாங்கிக் கொடுப்பார். சென்னைக்கு டிஸ்க் பிரேக் பைக் வந்தவுடனே அதை எனக்காக வாங்கிக்கொடுத்தார். எங்க அண்ணனுக்கு யமஹா பைக் ஒண்ணு வாங்கிக் கொடுத்தார். அந்த ரெண்டு வண்டியையும் இன்னைக்கும் பத்திரமா வெச்சிருக்கோம்’’ என்கிறார் ரவி.

“மூணு பேருமே தங்கமான பசங்கதான். ராஜாவும் ரோஜாவும் அமைதியான பசங்க. ரவி மட்டும் கொஞ்சம் துறுதுறுன்னு இருப்பான்’’ என வரலட்சுமி சொல்ல, அவரைத் தொடர்ந்த மோகன், “என் பசங்களோட கேரக்டரை வெச்சுதான் அவங்களுக்கான துறையை முடிவு பண்ணினேன். ராஜா எந்த விஷயமா இருந்தாலும், அதை ஆழமா யோசிச்சு முடிவு எடுப்பான். அதனால அவனுக்கு இயக்குநர் வேலைதான் சரியா இருக்கும்னு முடிவு பண்ணி, அந்த வழியை அவனுக்கு அமைச்சுக் கொடுத்தேன். ரவி ஸ்கூல் படிக்கும்போதிருந்தே ஹீரோதான். டான்ஸ், ஸ்போர்ட்ஸ்னு எல்லாப் போட்டிகளிலும் கலந்துகிட்டு, பரிசு வாங்கிட்டு வருவான். சின்ன வயசுல இருந்து பரத நாட்டியம் கத்துக்கிட்டான். அவனோட அரங்கேற்றத்துக்கு வைரமுத்து வந்திருந்தப்போ, ‘வீட்டுலேயே ஹீரோவையும் வெச்சிருக்கீங்க’ன்னு சொன்னார். அதேமாதிரி ரவியும் ஹீரோ ஆகிட்டான். பொண்ணுக்குப் படிப்பு நல்லா வரும். டாக்டராக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரி ரோஜாவும் டென்டிஸ்ட்டா இருக்கா’’ என மோகன் சொன்னபோது, தன் குழந்தைகள் குறித்த பெருமிதம் அவரின் கண்களில் தெரிந்தது.

“ராஜா இயக்கத்தைத் தவிர மற்ற இயக்குநர் களோடு ரவி நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?’’

எனக் கேட்டதும், `பேராண்மை’ எனக் கோரஸாக பதில் வந்தது. “ ‘பேராண்மை’ படத்தோட கதையைக் கேட்கும்போதே, `இது ரொம்ப நல்லா வரும்’னு எனக்குத் தோணுச்சு. அதே மாதிரி படத்தோட ஃபர்ஸ்ட் காப்பி பார்க்கும்போது, ரவியை இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிட்டேன்’’ என மோகன் சொல்லும்போது, “எங்க அப்பா கட்டிப்பிடிக்கிறதை வெச்சே, நான் படத்தோட ரிசல்ட்டைத் தெரிஞ்சுப்பேன். ஒவ்வொரு படத்தோட பிரிவியூ பார்த்துட்டும் அவர் கட்டிப்பிடிப்பார். கட்டிப்பிடிக்கும்போது முதுகுல கை லேசா பட்டுச்சுன்னா, `படம் சரியில்லை, மனசைத் தேத்திக்கோ’ன்னு நினைச்சுப்பேன். கொஞ்சம் இறுக்கமா கட்டிப்பிடிச்சார்னா, `படம் தப்பிச்சுக்கும்’னு நினைச்சுப்பேன். நல்லா இறுக்கமா கட்டிப்பிடிச்சா படம் ஹிட்’’ என ரவி சொன்னதும், ‘`எனக்கு ரவி நடிச்சதுல `பேராண்மை’யும், `ரோமியோ ஜூலியட்’டும் ரொம்பப் பிடிக்கும்’’ என ரோஜாவும், ‘`எனக்கு `பேராண்மை’, `பூலோகம்’ ’’ என ராஜாவும் லிஸ்ட் போட்டார்கள்.

“ரவியைத் தொடர்ந்து நீங்களும் விஜய் சேதுபதி படத்தில் நடிகராகிட்டீங்களே?” என்று மோகன் ராஜாவிடம் கேட்டோம். “எனக்குள்ள ஒரு நடிகன் இருக்கான்னு எங்க அண்ணன் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே, அவருக்குள்ள ஒரு நடிகன் இருக்கான்னு நான் கண்டுபிடிச் சிட்டேன். நான் லயோலா காலேஜ்ல படிக்கும்போது ஒரு குறும்படம் எடுத்தேன். அதில் எங்க அண்ணனைத்தான் நடிக்க வெச்சேன். அடுத்து அவர் இயக்குநராகி என்னை நடிக்க வெச்சபோது, ஒவ்வொரு சீனையும் நடிச்சுக் காட்டுவார். `நிறைய படங்களில் நடிங்க’ன்னு சொல்லுவேன். ஆனால், அவருக்கு நேரம் இல்லைன்னு நடிக்காமல் இருக்கார்’’ என்ற ரவியைத் தொடர்ந்த ரோஜா, ‘` ‘தனி ஒருவன்’ படத்தோட கதையை என்கிட்ட ராஜா அண்ணா சொன்னதும், `அந்த வில்லன் கேரக்டர்ல நீங்களே நடிங்க’ன்னு சொன்னேன். ஆனால், அவர் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார். இப்போ ‘தனி ஒருவன் 2’ல நடிங்கன்னு சொல்லிட்டிருக்கேன். அதுக்கும் நோ ரெஸ்பான்ஸ்’’ என்றதும், ‘`நான் டைரக்ட் பண்ற படத்துல கண்டிப்பா என்னால நடிக்க முடியாது. அதுவும் `தனி ஒருவன்’, `வேலைக்காரன்’ மாதிரியான படங்களில் ரொம்பவே அதிகமா உழைக்க வேண்டியிருந்தது. அதனால், அந்தப் படங்களில் இயக்குநராக மட்டுமே இருந்தேன். இப்போ விஜய் சேதுபதி நடிக்கிற `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்துக்காக நாலு நாள் கால்ஷீட் கேட்டாங்க. நாலு நாள்தானே, சரி நடிப்போம்னு ஓகே சொன்னேன். இதுல எனக்கு சர்ச் ஃபாதர் கேரக்டர்’’ என்ற ராஜா, தொடர்ந்தார்.

“எனக்குள்ள எப்படி ஒரு நடிகன் இருக்கானோ, அதே மாதிரி ரவிக்குள்ளேயும் ஒரு இயக்குநர் இருக்கார். ரெண்டு, மூணு கதை சொல்லியிருக்கான். மூணு கதையும் நல்லா இருந்துச்சு. அதில் ஒரு கதையை யோகிபாபுக்காக வெச்சிருக்கான்’’ என்கிறார்.

செம சர்ப்ரைஸா இருக்கே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here