கோலாலம்பூர் –
பகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாயிகளுக்காக மனம் வருந்துவதாகவும் இந்த சூழலுக்குத் தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால் தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
“நான் அமைச்சரவையில் இருப்பினும் இது ஓர் எதிர்க்கட்சியின் மாநில அரசின் விவகாரமாக இருப்பதாலும் அதோடு இதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் மத்திய அரசின் அதிகாரத்துடன் தீர்வு காணும் வாய்ப்பு பாதிக்கப்பட்டது” என்கிறார் சேவியர்.
சுமார் 60 விவசாயிகளின் தோட்டங்கள் அழிக்கப்படும்போது அது அனைவரையும் பாதிக்கின்றது. இந்தச் சூழலில் தனிப்பட்ட வகையில் யாரின் மீது குற்றம் உள்ளது என்பதைப் பற்றி அலசும் பொறுப்பை மக்களிடமே விட்டு விடுகிறேன் என்றார். கேமரன் மலையின் மக்கள் தொகை சுமார் 34,000, இதில் சுமார் 20% இந்தியர்கள் ஆவர். இந்தத் தொகுதி நாடளுமன்றத் தொகுதியாக 2004இல் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்து வருகிறது.
இதற்கு முன்பு இதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் மஇகாவின் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த தேவமணி மற்றும் பழனிவேல் ஆவர். இவர்கள் 2004 முதல் 2018 வரையில் இருந்தனர். 2019இல் வென்ற சிவராஜின் வெற்றி முறையற்ற செயலால் பெற்றது என்ற நீதிமன்ற ஆணையால் உண்டான இடைத்தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டும் வென்றது. அதன் வேட்பாளர் இரம்லியாகும். இத்தொகுதி மஇகாவிடமிருந்து பறிக்கப்பட்டது.
மேலும் விளக்கமளித்த சேவியர், கேமரன் மலை விவசாயிகளுக்கு ஒரு முழுமையான தீர்வு வேண்டும். இந்த இடம் தொடர்ந்து தேசிய முன்னணியின் கீழ் இருந்தாலும் நாட்டு மக்கள் என்ற நிலையிலும் அதைவிட இவர்கள் விவசாயிகள் என்ற நிலையிலும் இவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு தேவை என்கிறார்.
இவர்களுக்காக மஇகா பல வழிகளில் உதவியுள்ளதை மறுக்க இயலாது என்ற அவர், தற்போதுள்ள சிக்கலுக்கு அமைச்சர் என்ற நிலையில் நான் தான் தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் உள்ள இந்திய அமைச்சர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுவதில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதை உணர முடிகிறது.
இதில் நியாயம் உள்ளதா என்றும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த விவசாய நிலங்களுக்கு தற்காலிக நிலப்பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலப்பட்டாவின் காலவரம்பு ஒரு வருடம் மட்டும்தான். அதை வருடாவருடம் புதுப்பிக்க வேண்டும். இதன் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.