சுங்கைபட்டாணி –
நீண்ட பள்ளி விடுமுறை முடிந்து கெடா மாநிலத்தில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குக் குதூகலத்துடன் சென்று தங்களின் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பெரும்பாலான பள்ளிகளில் ‘மிக்கி மவுஸ்’ மாணவர்களை வரவேற்றதில் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள் திளைத்திருந்தனர். இந்த முறை கெடா மாநிலத்தில் முதலாம் ஆண்டுக்குக் காலடி எடுத்து வைத்த மாணவர்கள் ஆயிரத்து 110 பேர் என கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் பாலர்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி உதவி இயக்குநர் கணேசன் பலராமன் கூறினார்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 150 மாணவர்கள் குறைவாகும். முழுமையான எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும் என்றார் அவர். கோலமூடா மாவட்டத்தில் பெரிய பள்ளியாகத் திகழும் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் 93 மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 104 பேர் ஆவர்.
சுங்கைபட்டாணி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நரம்பியல் டாக்டர் ஜெயகாந்த், தமிழ்ப்பள்ளியினை தனது தேர்வாக தம் மகள் நர்மதாவை இப்பள்ளியில் சேர்த்துள்ளார். அதேபோல கோலமூடா மாவட்டத்தில் மற்றொரு பெரிய பள்ளியாகத் திகழும் கலைமகள் தமிழ்ப்பள்ளியில் 44மாணவர்கள் இந்தப் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
கடந்தாண்டும் ஏறக்குறைய இதே எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் இப்பள்ளியில் இணைந்தனர். தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் வாசகம் பொருந்திய சின்னத்தை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் வழங்கியது. சுங்கை துக்காங் சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியில் இந்த ஆண்டு 34 மாணவர்கள் முதலாம் வகுப்பில் நுழைந்துள்ளனர். கடந்தாண்டு 25 மாணவர்கள். இப்பள்ளி கடந்தாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் மிகப் பெரிய நன்மதிப்பைப் பெற்றதில் அதிகமான பெற்றோர் இப்பள்ளியின் மீது நம்பிக்கை வைத்து தங்களின் பிள்ளைகளை இங்கு சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று முதலாம் ஆண்டில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் காலடி எடுத்து வைத்த ஷர்வின் கோபாலுக்குப் பிறந்த நாள் என்பதால் அவரின் பெற்றோர் அன்பு முத்தங்களைப் பரிசாகத் தந்து பள்ளியில் சேர்த்தனர்.
அலோர்ஸ்டார் வட்டாரத்தில் உள்ள பாரதி தமிழ்ப்பள்ளியில் இந்த ஆண்டு 12 மாணவர்கள் இணைந்திருப்பதாகவும் கடந்தாண்டைவிட 5 மாணவர்கள் குறைவு எனவும் அப்பள்ளி தலைமையாசிரியர் எம். அழகப்பன் தெரிவித்தார்.
புதிய கட்டடத்தைப் பெற்று இந்த ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளியில் 12 மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ரெ. சண்முகம் அப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.