தர்பார் படத்துக்கு தணிக்கை குழு யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக வருகிறார். டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாடல்களும் வெளியிடப்பட்டன. படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலில் இருந்து சில வீடியோ காட்சிகளையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.
அமெரிக்காவில் தர்பார் சிறப்பு காட்சியை ஒரு நாள் முன்னதாக 8ஆம் தேதியே திரையிடுகின்றனர். இந்த நிலையில் தர்பார் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் பெற முனைப்பு காட்டினார்கள். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளிலும் மும்பை தாதாக்கள், ரவுடிகளின் அட்டூழியங்களிலும் அதிக வன்முறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி யூ சான்றிதழ் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ரஜினியின் கபாலி படத்தை விமானத்தில் விளம்பரம் செய்து இருந்தனர். அதுபோல் தர்பார் படத்துக்கும் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் விமானத்தில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.