சுங்கைசிப்புட் –
சுங்கை சிப்புட்டில் உள்ள சில தோட்டங்களில் கால்நடைகளை வளர்க்கக்கூடாது எனும் தடை நீக்கப்பட வேண்டும் என்று கால்நடை பண்ணை வைத்திருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை கூடாரங்களைக் காலி செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதைத் தொடர்ந்து அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 2017இல் இந்த விவகாரம் தொடர்பில் தோட்ட நிறுவனத்துடன் கால்நடை வளர்ப்போர் பேச்சு நடத்தினர். அப்போது நிலத்தைக் காலி செய்ய முடியாது என்றும் எங்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் அல்லது இப்போதுள்ள இடத்தைக் குறைந்த விலையில் ஒதுக்கித் தந்தால் வாங்கிக்கொள்ளத் தயார் எனவும் கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை நிறுவன அதிகாரி கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். இந்த நிலையில் இம்மாதம் 20ஆம் தேதி கால்நடை கூடாரங்கள் உள்ள நிலத்தைக் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதற்குத் தீர்வு காணப்படும் வரையில் நிலத்தைக் காலி செய்ய மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து கடந்த 2ஆம் தேதி சுங்கைசிப்புட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இருபத்துக்கும் மேற்பட்டோர் சுமார் நான்கு தலைமுறைகளாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர் என்று பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த சுகு கூறினார்.
“அவர்கள் 300க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர். திடீரென வெளியே போகச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.