மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் போட்டி செய்னா நேவால் – சிந்து காலிறுதிக்குத் தகுதி

கோலாலம்பூர் –

இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த உலகச் சாம்பியன் பி.வி. சிந்துவும் செய்னாவும் கால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

சுமார் 12 லட்ச வெள்ளி பரிசுத் தொகையை கொண்டிருக்கும் இப்போட்டியில் உலக பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்தித்தார்.

34 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-10, 21-15 என்ற நேர்செட்டில் அயா ஒஹோரியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். தொடக்கம் முதலே சிந்து ஆவேசமாக விளையாடினார். ஜப்பான் வீராங்கனை ஒஹோரியை இந்தியாவின் சிந்து தொடர்ச்சியாக 9ஆவது முறையாக தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கால் இறுதியில் சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்கை (தைவான்) சந்திக்கிறார். இதுவரை இருவரும் 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். இதில் தாய் ஜூ யிங் 11 முறையும் சிந்து 5 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் சிந்து 7 போட்டிகளில் தொடர் தோல்வியை கண்டார். 2020 புத்தாண்டில் சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மற்றோர் ஆட்டத்தில் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை செய்னா நேவால் 25-23, 21-12 என்ற நேர்செட்டில் 9ஆம் நிலை வீராங்கனையான தென்கொரியா வின் அன் செ யாங்கை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 39 நிமிடம் நீடித்தது.

கடந்த ஆண்டு நடந்த பிரான்ஸ் பேட்மிண்டன் போட்டியில் அன் செ யாங்கிடம் கண்ட தோல்விக்கு செய்னா நேற்று பதிலடி கொடுத்தார்.

கால்இறுதியில் சாய்னா நேவால், ஸ்பெய்னைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் இருவரும் தலா 6 வெற்றியை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here