கோலாலம்பூர் –
பள்ளிக்கூடங்களில் பொங்கலைக் கொண்டாடலாமா என்பது பற்றி கல்வி அமைச்சும் ஜாக்கிமும் தெளிவான முடிவை அறிவிக்காத நிலையில் நாட்டின் தலைவர்கள் இந்திய சமூகத்திற்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவும் மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அஸிஸா அமீனா மைமுன்னா இஸ்கண்டார் ரியாவும் தங்களின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ இண்ட்ராகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
நமது நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த இனிய விழா உங்களுக்கும் உங்கள் நேசத்திற்குரியவர்களுக்கும் அமைதியையும் வளப்பத்தையும் கொண்டுவரட்டும் என்று பேரரசர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
பிரதமர்
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். இந்தியர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக 31 விநாடிகள் அடங்கிய வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வளங்கள் நிறைந்த ஆண்டாக இது அமையட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பொங்கலைக் கொண்டாடும் மலேசியர்களுக்குப் பொங்கல் வாழ்த்தைப் பதிவு செய்துகொண்டார்.
பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் பல இனக் கலாச்சாரத்தை உள்ளடக்கிய மலேசியர்கள் ஒருவர் மற்றவரின் விழாக்களின் தனித்தன்மை குறித்து அறிந்துகொள்ள இதுபோன்ற விழாக்கள் நல்ல வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல இனக் கலாச்சாரம் மலேசியர்களுக்குத் தனித்துவத்தையும் வலிமையையும் வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.