பூர்வக்குடி இசைக்கலைஞர்கள் 10 பேர் சுட்டுக் கொலை

மெக்சிகோ –

மெக்சிகோவில் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த பத்து இசைக் கலைஞர்களைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரர்கள் அதன்பின் அவர்களின் உடல்களைத் தீயிட்டு எரித்தனர். குவாரேரோ மாநிலத்தின் சிலாப்பா எனும் நகரில் அந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது.

நாஹூவாஸ் எனும் பூர்வக்குடி இசைக் குழுவைச் சேர்ந்த அந்நபர்கள் ஓர் இடத்தில் தங்களின் நிகழ்ச்சியை முடித்து விட்டு ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் துப்பாக்கிக்காரர்கள் அவ்வாகனத்தின் மீது சரமாரியாகச் சுட்டு அவர்களைக் கொன்றனர் என்று வட்டார பூர்வக்குடி இனத்தின் ஒருங்கிணைப் பாளர் டேவிட் சஞ்சேஸ் லூனா குறிப்பிட்டார். அந்த பூர்வக்குடிகள் அல்கோசாகான் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்றும் அவர் சொன்னார்.

மரணமடைந்தவர்கள் பதினைந்து வயதுக்கும் நாற்பத்திரண்டு வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போயிருந்தன. வெள்ளிக்கிழமை இரவில் அத்தாக்குதல் நடைபெற்றது.

அதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பூர்வக்குடி மக்கள் சாலைகளை மறித்து இரவு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here