மென்செஸ்டரை கதறவிட்ட லிவர்புல்!

லண்டன் –

நட்சத்திர ஆட்டக்காரர் முகமது சாலா- விஜில் வான்டைக் அடித்த அற்புத கோல்களினால் லிவர்புல் 2-0 என்ற கோல்கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி சாதனை படைத்தது.

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் சக்கைபோடு போடும் லிவர்புல் நேற்று அதிகாலையில் தனது அரங்கில் நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டரை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய மறுவிநாடியே மென்செஸ்டர் தற்காப்பு அரணை நோக்கி லிவர்புல் தாக்குதல் நடத்தியது.

இதன்வழி 14ஆவது நிமிடத்தில் லிவர்புல் கிளப்பின் முதல் கோலை நெதர்லாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் விஜில் வான்டைக் தலையால் முட்டி கோலாக்கினார்.
பிற்பகுதியிலும் லிவர்புல் தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு மென்செஸ்டர் தாக்குதல் நடத்தினாலும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது. 93ஆவது நிமிடத்தில் லிவர்புல் கோல்கீப்பர் எலிசன் பந்தை பிடித்து மறுகணமே மென்செஸ்டர் எல்லையில் இருந்த முகமது சாலாவுக்கு அனுப்பினார்.

தனக்கு கிடைத்த பந்தை அற்புதமாக பெற்றுக் கொண்ட முகமது சாலா மின்னல் வேகத்தில் முன்னேறி மென்செஸ்டர் தற்காப்பு ஆட்டக்காரரையும் கோல்காவலர் டேவிட் கியாவையும் ஏமாற்றி கோலாக்கினார்.

இதுவரை 22 ஆட்டங்களை முடித்துள்ள லிவர்புல் 21இல் வெற்றியும் 1இல் டிராவும் கண்டு 64 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மென்செஸ்டர் சிட்டி 48 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் லெய் செஸ்டர் சிட்டி 45 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் செல்சி 39 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. மென்செஸ்டர் சிட்டியுடன் ஒப்பிடுகையில் 16 புள்ளிகளுடன் முன்னணி வகிக்கும் லிவர்புல் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here