நெதர்லாந்து அபார வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ’எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது.

ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக ஓன் கோல் அடித்ததால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. அதன் பின்னர் 7ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரையன் ப்ரோபி கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். இதன்பிறகு இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், முதல் பாதியில் மேலும் கோல் எதுவும் பதிவாகவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணி தீவிரமாக தாக்குதல் நடத்த தொடங்கியது.

அதன் பலனாக 54ஆவது நிமிடத்தில் ஹசெம் மஸ்தூரி கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்து, கோல் வித்தியாசத்தை 2-1 ஆக குறைத்தார். துனிசியாவின் பதிலடிக்கு பின்னர் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த நெதர்லாந்து, 62ஆவது நிமிடத்தில் ஜான் பால் வான் ஹெக்கே கோல் அடித்து முன்னிலையை 3-1 ஆக உயர்த்தியது. மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடினாலும், கூடுதல் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இறுதியில், நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here