மலாக்கா –
சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம்.
அது மட்டுமன்றி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அமாட் உட்பட மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்திபா கோயா திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
1எம்டிபி நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பான விசாரணையின்போது நஜிப், ரோஸ்மா, ஸுல்கிப்ளி ஆகியோர் தொலைபேசி வாயிலாக சில ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று லத்திபா தெரிவித்தார்.
அவர்களுக்கிடையிலான இந்த உரையாடல்கள் தொடர்பான ஒன்பது குரல் பதிவு நாடாக்களை அவர் அம்பலப்படுத்தினார். இந்த விசாரணையில் இருந்து தமது வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸைக் காப்பாற்றும்படி ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டைச் சேர்ந்த ஓர் இளவரசரின் உதவியை நஜிப் நாடிய உரையாடல் பதிவும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
நேற்று மலாக்காவில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த விவகாரம் தொடர்பாக எந்த நேரத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றார் படோர்.