முல்லைத்தீவில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடு!

தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டனரா?

கொழும்பு –

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவில் இருக்கும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் நேற்று கட்டங்கட்டமாகக் குழிகள் தோண்டப்பட்டபோது அங்கு நிலவெடிகள் இருந்தது தெரியவந்தது.

நிபுணர்களின் உதவியுடன் நிலவெடிகளை அகற்ற முயன்றபோது அங்கு மனித எலும்புக்கூடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அந்தப் பகுதி பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நேற்றுக் காலை முதல் அப்பகுதியில் புதையுண்டுள்ள மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

பணி நிறைவு பெற்ற பிறகே எத்தனை மனித எலும்புக்கூடுகள் புதையுண்டன என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸ் கூறியது.

எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் எப்போது இறந்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின் குமார் கூறினார். ஆய்வு முடிவு தெரியும்வரையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டன. இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது இங்கு தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று இலங்கை தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசு இதை மூடி மறைக்கவும் அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் இப்போது கிடைத்துள்ளன என அறிவித்து திசைதிருப்ப வாய்ப்புகள் உள்ளதாக அந்த அமைப்புகள் கூறின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here