கனவில் இறைவன் தோன்றினால் என்ன பலன்?

நம்முடைய ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் கனவாக வெளிப்படுகின்றன. சிலருடைய மனதில் நல்லதையே நினைத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல கனவு வருவதுண்டு. கெட்டது ஏதாவது நடந்துவிடுமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கு கெட்ட கனவு வருவது உண்டு. நம்முடைய தேவையற்ற மற்ற சிந்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு, நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், இறைவனை மட்டும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு அந்த இறைவன் அவர்களுடைய கனவில் காட்சி தருகின்றார்.
இப்படியாக நம் வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.  பொதுவாக இரவு 1 மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து அந்த கனவு பலிக்கும். இரவு இரண்டு மணிக்கு கனவு கண்டால் அந்த கனவு 3 மாதத்தில் பலிக்கும். அதிகாலை வேளையில் கனவு கண்டால் அந்த கனவு உடனே பலிக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
முருகனை கனவில் கண்டால், நீங்கள் மனதில் நினைத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி அடையப் போகிறீர்கள் என்பது அர்த்தம். சிவலிங்கத்தை கனவில் கண்டால் நீங்கள் தினமும் தியானம் செய்யும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்பது அர்த்தமாகும். பிள்ளையார் கனவில் வந்தால் நீங்கள் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் வெற்றியடையும் என்பது அர்த்தம். அய்யனாரை கனவில் கண்டால் மன தைரியம் அதிகரிக்கும். விஷ்ணு பகவான் கனவில் வந்தால் நாம் செல்வந்தர்களாக போகிறோம் என்பது அர்த்தம். விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது அர்த்தம்.
உங்களது கனவில் கோவில் வந்தால் இறைவனின் ஆசி உங்களுக்கு நிறைந்திருக்கிறது என்பது அர்த்தமாகும். கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை காண முடியாமல் திரும்பி வருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தீராத பிரச்சினை ஒன்று காத்திருக்கின்றது என்பது அர்த்தம். ஆலயத்தில் நீங்கள் மட்டும் தனியாக இருப்பது போல் கனவு கண்டால் உங்களது தொழிலில் எதிர்பாராத பிரச்சினை ஏற்பட போகிறது என்பது அர்த்தம். உங்கள் கைகளால் கோவில் வாசல் கதவுகளை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் புதிய தொழில் தொடங்கி வெற்றி அடையப் போகிறீர்கள் என்பது அர்த்தம்.
கோவிலில் பிரசாதம் வாங்குவது போல கனவு வந்தால் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த மனக்கவலை தீர போகிறது என்பது அர்த்தம். கோவில் கோபுரங்கள் உங்களது கனவு வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் கூட நீங்கிவிட்டது என்பது அர்த்தம். அந்த இறைவன் உங்களிடம் பேசுவது போல கனவு கண்டால் இந்த ஜென்மம் புண்ணியத்தை அடைந்ததாக அர்த்தம். கோவில் இருக்கும் தெப்பக்குளத்தை கனவில் கண்டால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது அர்த்தம். காளிதேவி உங்களது கனவில் வந்தால் நீங்கள் எதிர்பாராத பிரச்சனை, சண்டை சச்சரவு உங்களைத் தேடி வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
ஏதாவது ஒரு கடவுளின் விக்ரகம் உங்களது கனவில் தோன்றினால் அந்த தெய்வத்தை நீங்கள் குடும்பத்தோடு சென்று வழிபட வேண்டியது அவசியமாகும். கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால், கோவிலுக்கு செல்லும் போது தடங்கள் ஏற்படுவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏதோ ஒரு இடையூறு ஏற்பட போகிறது என்பதை குறிக்கும். நவகிரகங்களை கனவில்கண்டால் 9 வாரம், நவகிரக கோவிலுக்கு சென்று 9 முறை வலம் வருவது நன்மை தரும். யானை உங்களை துரத்துவது போல கனவு கண்டால் விநாயகருக்கு ஏதோ ஒரு குறையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது அர்த்தம். யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் போவது என்பது அர்த்தம். அம்பாளை கனவில் கண்டால் உங்களது வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்பதை குறிக்கும். உங்களது கனவில் வேறு எந்த தெய்வங்கள் வந்தாலும் அது நல்ல சகுணங்கள்தான் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here