சிங்கப்பூர் | மார்ச் 05, 2026:
சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் குடியிருப்புப் பகுதியில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி காலை, இரண்டு குதிரைகள் தங்களின் லாயத்திலிருந்து தப்பித்துச் சாலைகளில் ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் சிறு பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மார்ச் 3, காலை 11:20 மணியளவில் எலியாஸ் சாலை (Elias Road) பகுதியில் முதன்முதலில் இந்த இரண்டு ஆண் குதிரைகள் காணப்பட்டன.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில், ஒரு வெள்ளை நிறக் குதிரை பாசிர் ரிஸ் டிரைவ் 3 சாலையில் வேகமாக ஓடுவதும், வாகனங்கள் அதற்குப் பின்னால் மெதுவாகச் செல்வதும் பதிவாகியுள்ளது. மற்றொரு பழுப்பு நிறக் குதிரை நிதானமாகச் சாலைச் சந்திப்பைக் கடந்து சென்றது.
அந்த வெள்ளை நிறக் குதிரை ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பின் போர்டிகோ (Porch) பகுதி வழியாக ஓடி, புல்வெளிப் பாதையைக் கடந்து மீண்டும் எலியாஸ் சாலைக்குத் திரும்பியது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், குதிரை லாயப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு அந்த இரண்டு குதிரைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிர் ரிஸில் உள்ள ‘Gallop Stable’ இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்கள் குதிரைகள் இரண்டு சுற்றுப்புறத்தை ஆராய முடிவு செய்துவிட்டன. தற்போது அவை பத்திரமாக வீடு திரும்பிவிட்டன. அவற்றுக்கு உதவி செய்த பொதுமக்களுக்கு நன்றிகள்,” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ‘குதிரை ஆண்டு’ (Year of the Horse) என்பதால், இந்தச் சம்பவம் இணையதளங்களில் பல வேடிக்கையான கமெண்ட்டுகளுடன் வைரலாகி வருகிறது.





















