மகாதீர் பரிந்துரை?
கோலாலம்பூர் –
ஓர் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தலைமையேற்கும் பரிந்துரையை துன் டாக்டர் மகாதீர் முகமது முன்வைத்திருக்கிறார். இதில் போட்டித் தரப்பு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இணையுமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்ற அவர், திடீர் ராஜினாமாவால் நாட்டில் பெரிய அரசியல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். நேற்றுக் காலை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோது இந்தப் பரிந்துரையை டாக்டர் மகாதீர் முன்வைத்திருக்கிறார் என்று அண்மைக்கால அரசியல் நிலவரங்களை நன்கு தெரிந்து வைத்துள்ள அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் 2018 பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.
துன் டாக்டர் மகாதீரின் இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அரசியல் கட்சிகள் அல்லாத ஓர் அரசாங்கம் அமையும் என்பது திட்டவட்டம். அதே சமயத்தில் எதிர்க்கட்சி இல்லாத ஓர் ஒற்றுமை அரசாங்கமாக அது இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தகவல் ஊடகங்களிடம் பேசும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்படாததால் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள அந்த வட்டாரங்கள் மறுத்து விட்டன.
இது குறித்து டாக்டர் மகாதீர் உடனடியாகக் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.