ஜித்ரா சுங்கச்சாவடி அருகே பயங்கரம்: கார் தீப்பற்றி எரிந்ததில் இருவர் உடல் கருகி பலி!

ஜித்ரா:

இன்று (ஜனவரி 19, 2026) அதிகாலை ஜித்ரா சுங்கச்சாவடி பகுதியில் ஹோண்டா சிவிக் (Honda Civic) ரக கார் ஒன்று விபத்துக்குள்ளாகி திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் இருந்த இருவர் வெளியேற முடியாமல் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர்.

அதிகாலை 1.05 மணியளவில் ஜித்ரா தீயணைப்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்தது என்றும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கார் ஏற்கனவே 85 சதவீதம் தீயில் எரிந்துவிட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1.23 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் ஜித்ரா தீயணைப்பு நிலைய இயக்குநர் நூர் அசார் தாஜூடின் கூறினார்.

காரின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த இருவரின் உடல்களை மீட்புப் படையினர் சிறப்பு வெட்டும் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர். உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் ஆணா அல்லது பெண்ணா? போன்ற விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால், அடையாளத்தைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here