மாற்றமா? அது மகாதீருக்குள் மடியுமா?

மாற்றமா? அது மகாதீருக்குள் மடியுமா?

மார்ச் 10-

மலேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டு வந்தாக வேண்டும் என்ற சிந்தனையில் ஒருவர் இருப்பார் என்றால் அது துன் டாக்டர் மகாதீரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

கோட்டையில் அவர்தான் இருந்தார்… கொடி ஏற்றத்திற்கும் குறைவில்லாமல்தான் வாழ்ந்தார்!

60 வருட ஆட்சிக்கு முடிவு கட்டிய புளகாங்கிதத்தோடு…

எனினும், எல்லாமே இரண்டு ஆண்டு முடிவதற்குள் முடிந்து போனது.

சீட்டை அன்வாருக்கு கொடுத்தாக வேண்டுமா என்று சிந்தித்தன் விளைவு… துருப்புச் சீட்டைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுப் பார்த்தார். தன் பக்க நியாயமே சாய்ந்து போகும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை! ஓர் அரசியல் சாணக்கியரை சறுக்கி விழ வைத்து விட்டார் அவரது அடுத்த வழித்தோன்றல்.

இன்று…

‘பெரிக்காத்தான் நேஷனல்’ என்ற பெயரால் டான்ஸ்ரீ மொகிதீன் தலைமையில் ஆளும் அரசாங்கம் அமைக்கப்பட்டு விட்டது.

இதுவும் நிரந்தரமா என்றால் தீர்க்கமான பதில் கிடையாது!
இதுவே நிரந்தரம் என மொகிதீன் இறுமாப்பு கொள்ளவும் முடியாது!

அம்னோவின் பலம் அமைச்சரவையில் அழுத்தமாக இல்லை என்பதால் மீண்டும் ஒரு ‘காய் நகர்த்தல்’ வரக்கூடும் என்பது மட்டும் தெரிகிறது.

அமைச்சரவை கூடும்போது அதில் மற்றொரு பக்க நியாயம் வெளிப்படவும் வாய்ப்பு உள்ளது. அமைச்சரவை கூடும் நேரம் வரையில் அவகாசம் அதிகம் இருப்பதால்…

கிளைக்குக் கிளை தாவுதல், கட்சி விட்டு கட்சிக்கு தாவுதல் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்… தடுக்க முடியாது.

கோட்டைக்குள் நுழைய என்ன செய்யலாம் என்பதுதான் மகாதீரின் தற்போதைய தீவிர சிந்தனையாக இருக்கும். கோட்டைக்குள் போக வேண்டும். ஆனால், கூடவே அன்வார் வரக்கூடாது. முக்ரிஸ் வந்தால் பாதகமில்லை என்ற சிந்தனையின் பக்குவம் மலேசிய அரசியலை மீண்டும் புரட்டிப் போடப் போகிறது.

14ஆவது பொதுத் தேர்தலிலேயே மகாதீர் இல்லாத பிரச்சாரத்திற்கு அன்வார் களம் அமைத்திருக்க வேண்டும். அப்போது அவரால் முடியவில்லை. சுங்கை பூலோ சிறைச்சாலைச் தடுப்புச் சுவர் பலமான எதிரியாக இருந்தது.

இப்போது அன்வார் வெளியே இருப்பதாலும்… நீ பெரிசா நான் பெரிசா என்ற பேதமை தலைத்தூக்கும் மக்களவைக் கூட்டம் அமளி துமளியில் முடியலாம் என்பதாலும்… பரிச்சயமில்லாத 9 பேரை மட்டுமே தாங்கிய அம்னோவின் அழுத்தம் குறைவான அமைச்சரவையை மொகிதீன் உருவேற்றி இருப்பதாலும்…

பொதுத்தேர்தலே அனைத்து பிணக்குகளுக்குமான இறுதித் தீர்வாக அமையலாம் என்பதாலும்,

மகாதீரும் மாற்றுக் கருத்தை சிந்திக்கலாம்
மகாதீர் இல்லாத பிரச்சாரத்தை முன்வைக்கும்
அன்வாரும் மாற்றுக் கருத்துக்குள் தாராளமாகச் செல்லலாம்!

– மு.ஆர்.பாலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here