பெர்சாமா’ கட்சிக்கு டாயிம் குடும்பம் நிதியுதவியா?; அவதூறுகளுக்கு ரஃபிஸி ரம்லி அதிரடி பதில்!

கோலாலம்பூர்:

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘பெர்சாமா’ (Bersama) அரசியல் கட்சிக்கு, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நைமா அப்துல் காலிட் அல்லது அவரது குடும்பத்தினர் நிதியுதவி அளித்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அதன் இணை நிறுவனர் ரஃபிஸி ரம்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மாறாக, இந்த புதிய இயக்கத்திற்காக இதுவரை தனது சொந்தப் பணத்திலிருந்து 80,000 ரிங்கிட்டைச் செலவிட்டு, நானே இக்கட்சியின் மிகப்பெரிய நிதியுதவியாளராக இருக்கிறேன் என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி இன்று தமது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இக்கட்சியை தாம் 8.5 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கியதாகவும், இதற்குப் பின்னால் டாயிம் குடும்பத்தினர் இருப்பதாகவும் பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் திட்டமிட்ட அவதூறுகள் என்று சாடிய அவர், நிதி விபரங்களை உடைத்துள்ளார்:

“கடந்த மே 17-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவிற்காக 30,000 ரிங்கிட்டையும், புச்சோங்கில் உள்ள பெர்சாமா தலைமையகக் கட்டடத்தின் முன்பணத்திற்காக (Deposit) 50,000 ரிங்கிட்டையும் எனது சொந்தப் பணத்திலிருந்தே வழங்கியுள்ளேன்.”

தற்போது இந்த இயக்கம் சுமார் 27,000 மலேசியர்களின் ஆயுட்கால உறுப்பினர் கட்டணம், அதிகாரப்பூர்வ பொருட்கள் (Merchandise) விற்பனை மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு (Crowdfunding) மூலம் திரட்டப்பட்ட சுமார் 750,000 ரிங்கிட் நிதியைக் கொண்டுதான் இயங்கி வருகிறது. இந்த நிதியைக் கொண்டுதான் ‘ஜெலாஜா காஞ்சில்’ (Jelajah Kancil) பிரச்சாரம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட செலவுகள் சமாளிக்கப்பட்டு வருவதாக அவர் விவரித்துள்ளார்.

முன்னதாக, பெர்சாமா கட்சி 8.6 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டதாகக் கூறி, தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலின் டிக்டாக் (TikTok) பக்கத்தில் ஒரு காணொளி பகிரப்பட்டிருந்தது. இதுகுறித்து, ரஃபிஸியுடன் இணைந்து இந்த இயக்கத்தை வழிநடத்தும் மற்றொரு முன்னாள் அமைச்சரான நிக் நஸ்மி நிக் அகமட் எக்ஸ் (X) தளத்தில் தனது கடுமையான கவலையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு பெரும் தொழிலதிபர்களுக்கோ அல்லது அரசியல் குரோனிகளுக்கோ (Cronies) அடிமையாகாமல், கட்சியின் சுதந்திரத்தைப் பேணவே பொதுமக்களிடம் இருந்து சிறு தொகையாக நிதி திரட்டப்படுவதாகவும், மக்களின் நிதியில் இயங்கும் இந்த இயக்கம் எப்போதும் மக்களுக்கான குரலாகவே ஒலிக்கும் என்றும் ரஃபிஸி ரம்லி மேலும் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here