கோலாலம்பூர், மார்ச் 11-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் ஏற்பட்ட செம்பனை இறக்குமதி தொடர்பான பிணக்கு புதிய அரசாங்கத்தின் வாயிலாக அடுத்த நான்கு வாரங்களில் தீர்வுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் விவசாயத் தொழில்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரசாலி மேற்கண்ட உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்த புதிய குழு ஒன்று விரைவில் அங்கு அனுப்பி வைக்கப்படும். சுமுகமான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மலேசிய செம்பனை எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது இந்தியாவின் காஷ்மீர் கொள்கை குறித்து மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கருத்துரைத்தார் என்பதற்காக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி மலேசிய செம்பனை எண்ணெய்யை இந்தியா வாங்காது என அறிவித்து தடையும் விதித்தார்.
உலக நாடுகளிலேயே இந்தியாவே அதிகமான செம்பனை பயனீட்டைக் கொண்டுள்ளது என்பதுடன் மலேசியாவே அதன் முதன்மை செம்பனை இறக்குமதி நாடாக விளங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.