கோலாலம்பூர், மார்ச் 20-
கொரோனா 19, மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துவிடும் அபாயத்தில், ஒரு லட்சம் மக்கள் வேலையிழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர்.
இத்தொற்றின் தாக்கத்தை இன்னும் கூட சில தொழில் நிறுவனங்கள் உணராமல் இருக்கின்றனர் என்று சிறு, நடுத்தர வர்த்தகத் தொழில்துறை சங்கத்தின் தலைவர் டத்தோ மைக்கல் காங் கூறியிருக்கிறார்.
மார்ச் 18-ஆம் நாள் தொடங்கி மார்ச் 31-ஆம் நாள் வரை மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளால் தொழில்துறைகள் வேலை மறுப்புக்கு இலக்காகி வருகின்றன.
நாள் வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் குறைந்த சம்பளத்தில் கமிஷன் வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் பெரும்பாதிப்பில் இருக்கின்றனர்.
இந்த 14 நாட்களின் வருமானம் இழப்பு குடும்பத்தில் சுனாமியை ஏற்படுத்திவிடும் என்று மூடப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
தொழில் முனையங்கள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவானால் 5 முதல் 10 விழுக்காடுவரை மூடவேண்டிய அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்கிறார் அவர்.
பலநிறுவனங்கள் தயார் நிலையில் இல்லை. காரணம் நிதிநிலைமையில் அந்நிறுவனங்கள் வளமாக இல்லை என்பதுதான்.
சில நிறுவனங்கள் இரு மாதங்கள் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். இதே நிலை ஆறு மாதங்கள் வரை நீடித்தால் நிலைமை என்னவாக இருக்கும்?
வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வாய்ப்புகள் பல நிறுவனங்களுக்கு இல்லை. பலர் விடுப்பில் செல்ல அனுமதித்திருக்கின்றனர்.
இந்த விடுப்பு விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. கட்டாயத்தின் பேரில் விடுப்பு வழங்கப்படுவதால் இதை வருடாந்திர விடுப்பில் சேர்க்கவும் கூடாது என்றும் தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
விடுமுறை ஒரு பொருட்டள்ள, வருமானம் இல்லையென்பதாக இருந்தால் அரசு உதவ முன் வரவேண்டும்.
உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பு வருட இறுதியில் கூடுதல் பாதிப்பைக்கொண்டிருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி நேர்ந்தால் அதையும் எதிர்கொள்ள மக்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்கிறார் மலேசிய தொழிலாளர் சமேளனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சம்சுடின் பார்டான்.
சிங்கப்பூரில் 108,000 தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.