உழைக்கும் மக்களின் உன்னத சேமிப்புதான் தொழிலாளர் சேமநிதி. வேலையில் சேர்ந்ததும் சேமநிதி கணக்கு திறக்கப் படவேண்டும் என்பது அடிப்படைச் சட்டம். இதை, பெரும்பான்மை நிறுவனங்கள் பின் பற்றுகின்றன. சிறுவணிகர்களும் இதை முறையாகச் செய்துவருகின்றனர்.
மக்களைப் பொறுத்தவரையில் மிகுதியானவர்கள் தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள். முதலாளிகளும் தொழிலாளர்கள்தான். அவர்களில் சிந்தனையும் தொழில் விருத்தியும் தொழில் சார்ந்துதான் இருக்கின்றன.
உழைக்கும் மக்கள் தனியாகச் சேமிப்பது மிகவும் குறைவு, உழைக்கும் மக்களின் வருமானம் சேமிக்கும் அளவில் இல்லை. விரலுக்குத்தக்க வீக்கம்போல் தான் இருக்கும். பெரிய சேமிப்பு என்பது ஓரளவு என்று சொல்லத்தக்க அளவில்தான் இன்றளவும் இருக்கிறது.
தொழிலாளர் சேமநிதி மட்டும்தான் நிரந்தர சேமிப்பாக இருக்கும். பல குடும்பங்களில் இந்த சேமிப்புதான் பிரச்சினையாகவே முளைக்கும். பெற்றோரின் இறுதிக்கால சேமிப்பாக விளங்கும் தொழிலாளர் சேமநிதி படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
புரிந்துகொள்ளாத பிள்ளைகளுக்கு இது தான் லாட்டரிப் பணம். இத்தப் பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொள்வார்கள். இதில்தான் கைப்பேசி வாங்குவார்கள். இதைக்கொண்டுதான் காரும் வாங்கிக்கொள்வார்கள். விவரம் புரியாத பெற்றோர் இப்படித்தான் செய்வார்கள்.
பிள்ளைகளுக்குக் கல்யாணமும் இந்தப்பணத்தில்தான் நடக்கும். 30, 40, ஆயிரங்கள் என்று செலவாகும். இது கட்டாயம் ஆகிவிடும். இறுதிக் காலத்தில் தூக்கிபோட யார் இருக்காங்க இருக்காங்க என்றெல்லாம் பெற்றோர் பலர் அடங்கிப் போவார்கள். இவையாவும் நடப்பு உண்மைகள்.
சரி, அது புறம் இருக்கட்டும். இன்றைய கொரோனாவுக்கும் சேமநிதிக்கும் என்ன தொடர்பு என்று சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதுதான் செய்தி.
கொரோனா நோய்த்தொற்று அதிகமாகிக்கொண்டே போகிறது. இதனால் வேலை இழப்பு வருமானம் பாதிப்பு என்றெல்லாம் மக்களைக் கட்டிப்போட்டிருக்கிறது.
மாதாந்திர செலவினங்களைச் சமாளிக்க சேமநிதி இண்டாவது கணக்கிலிருந்து மாதம் 500 வெள்ளி என மீட்க வழியமைக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு இப்படிச்செய்ய முடியும்.
நம் கையைக்கொண்டே நம்கண்ணில் குத்திக் கொள்வது போன்றது இந்த யோசனை என்று பலர் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர்.
கொரோனா நாட்டை உலுக்கிக் கொண்டிருப்பது தேசிய பிரச்சினை. அரசாங்கத்தின் முழுமையான அக்கறை இதில் முக்கிய பங்காக இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
சேமநிதியிலிருந்து பணம் மீட்பது சரியான யோசனை அல்ல என்ற கருத்தில்தான் பலரும் இருக்கிறார்கள். ஒராண்டில் 6 ஆயிரம் வெள்ளியை இழக்க நேரிடும்.
இதனால், வட்டியும் குறைந்து விடும். இது நியாயமற்றதாகவே இருக்கும் என்பதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஒரு பெரிய குடும்பத்திற்கு 500 வெள்ளி என்பது ஒருவாரத்திற்குக் கூடத்தாங்காது. விலையேற்றமும் மூழ்கடித்துக்கொன்டிருக்கிறது.