பினாங்கில் சட்டவிரோத லாட்டரி சூதாட்டம்; 1,041 சோதனைகள்- 1,054 பேர் கைது

ஜார்ஜ் டவுன்: பினாங்கு முழுவதும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் 27 வரை மொத்தம் 1,041 சோதனைகளை நடத்தி  சட்ட விரோத பொது லாட்டரி சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1,054 நபர்களை போலீசார் கைது செய்தனர். பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின், இந்தக் காலகட்டம் முழுவதும் கைப்பற்றப்பட்ட மொத்த மதிப்பு 88,879.50 ரிங்கிட் என்று கூறினார்.

ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளுக்காக, நாங்கள் அந்த காலகட்டத்தில் 605 சோதனைகளை நடத்தினோம். 630 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்டதன் மொத்த மதிப்பு 25,058 ரிங்கிட் என்று அவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக புக்மேக்கிங் அல்லது குதிரை பந்தய நடவடிக்கைகளை குறிவைத்து 18 சோதனைகளை போலீசார் மேற்கொண்டனர். இதன் விளைவாக 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 13,961 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். அதுமட்டுமின்றி, தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து மின்சாரத்தை துண்டிக்க ‘Op Pemotongan Bekalan Elektrik’ நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டனர்.

‘பொதுவான விளையாட்டு வீடுகள்’ (காமன் கேமிங் ஹவுஸ்) சட்டம் 1953 இன் பிரிவு 21A இன் கீழ் மொத்தம் 44 வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை (செப். 27) சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 13 வளாகங்களை உள்ளடக்கிய செயல்பாடுகள் இதில் அடங்கும். அவைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

பினாங்கு காவல்துறையின் கூற்றுப்படி, மாநிலத்தில் சட்டவிரோத சூதாட்டத்தை நடத்துபவர்களிடம் தனது தரப்பு  சமரசம் செய்யாது மற்றும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும். சட்டவிரோதமான சூதாட்டச் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here