கல்பர்கி, ஏப்ரல் 1-
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,397 ஆக உள்ளது. கொரோன வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பு மருந்து எதுவும் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தற்போது ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ள அரசு, அதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருமாறு அறிவுறுத்தியுள்ள அரசு, காய்கறிகள் உள்ளிட்ட சந்தைகளில் மக்கள் பொருட்களை வாங்கும் போது ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்பதே சிறந்தது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும், நாட்டின் பல இடங்களில் மக்கள் இத்தகைய கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, எப்போதும் போலக் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றனர். போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கின்ற போதிலும் மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள கல்பர்கி நகரில், மக்கள் காய்கறி சந்தையில் திரளாக நின்று காய்கறிகள் வாங்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விலகல் எதையும் பின்பற்றாமல், மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றனர். கர்நாடகாவில் கொரோனா வைரசால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.