ஜெனிவா –
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மருத்துவத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றும் அளப்பரிய சேவையைச் செய்து வருகின்றனர்.
இந்த பணியில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர். கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் 22 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) நிலவரப்படி உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆரம்ப கட்ட தகவலின் அடிப்படையில், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிட மிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கொரொனா பரவுவதாகவும் அதே சமயம் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.