ஏணியில் ஏறும் விலைவாசி! இறங்கி வருவாளா மகராசி?

விலைவாசி!
ஏறும் விலைவாசி!

பினாங்கு ஏப். 19-

கொரோனா நோய் அபாயம் தொடர்பில் நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்ட காலத்தில், மக்களின் அன்றாடத் தேவைக்கு அத்தியாவசியமாக விளங்கும் பல்வகைப் பொருட்களின் விலை ஏணியில் ஏறிக் கொண்டே போகிறது.

தாறுமாறான விலையேற்றம், வாழ்வாதாரத்திற்கு பெரும் மருட்டலாக உருவெடுத்திருப்பதாக, பினாங்கு இந்து இயக்கமும் பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கமும் கூட்டாகக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

நோய் அபாய ஊரடங்குக் காலத்தில் காய்கறிகளும் மளிகைப் பொருட்களும் கடுமையாக விலையேற்றம் கண்டிருப்பதால், இவற்றை வாங்குவதற்கு சாமானிய மக்களும் ஏழை எளியவர்களும் விழி பிதுங்கி நிற்கும் பரிதாப நிலை, வாழ்வியல் அவலங்களாக நிகழ்ந்து வருவது தொடர்பில் அவ்விரு அமைப்புகளும் கண்டித்தக்க வகையில் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

ஊரடங்கு அமல் சட்டத்தால் நாட்டின் பொருளாதாரச் சுமை பலரது வாழ்க்கையில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால் ஏழை எளியவர்கள் பலர் அல்லல்படுகின்ற அவலம் தொடர்கதையாகி வருவது வேதனைக்குரியது என்று, பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி.முருகையா
விவரித்துள்ளார்.

ஏறத்தாழ எல்லாவிதமான சமையல் பொருள்களும் காய்கறி வகைகளும் சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாலும், உள்நாட்டு வாணிப அமைச்சகம் இது குறித்து கண்டு கொள்ளாமலிருப்பதாலும், சாமன்ய மக்கள் திண்டாடி வருவதாக, தஞ்சோங் தமிழ் முஸ்லிம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கருத்துரைத்துள்ளார்.

மாதாந்திர வருமானத்தைப் பெற்று குடும்பம் நடத்துகின்ற ஏராளமானோர், கொரோனா நோய் அபாயக் கெடுபிடிகளால், வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்திருக்கும் நிலையில், அன்றாடத் தேவைகளின் செலவீனங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகின்ற அவலமும்
இதன் பொருட்டு பெரும்பாலோர் கடனாளியாகி வரும் சூழலும் உருவாகியிருப்பது சோகமானது என்று அவ்விருவரும் கூட்டாக எடுத்துரைத்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருள்களின் தாறுமாறான
விலையேற்றத்தால், ஏழை எளியவர்களின் வாழ்வியல் அவலங்கள் இன்று தலைவிரித்தாடுவதாகவும், அன்றாடத் தேவைக்கானப் பொருட்கள் தற்போது எட்டாத கனியாக உருமாறி விட்டதாகவும் அவ்விருவரும் முறையிட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு நியாயமான விலைகளில் கிடைப்பதற்கு, உள்நாட்டு வாணிப அமைச்சகம் விரைந்து உரிய நடவடிக்கைகளில்
ஈடுபாடு காட்டுவது அவசியமென்று இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீட்டு உபயோகப் பொருள்களின் கட்டுக் கடங்காத விலையேற்றம் இனியும் நீடிக்குமானால், தற்போது மக்கள் அன்றாட வாழ்க்கைக்காக நடத்தி வரும் போராட்டம் எல்லை மீறி விடுமென்று, அவ்விருவரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது பெட்ரோல் விலை பெருமளவு குறைந்து விட்ட பட்சத்தில், மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில்
சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும், இதனை கருத்திற் கொண்டு, மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் சுமூகத் தீர்வு கண்டு, ஏழை மக்களுக்கு விரைந்து உதவ வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கொரோனா நோய் அபாய ஊரடங்குப் பிரச்சினையால், மக்கள் எதிர்நோக்கி வரும் அல்லலையும் இன்னலையும் கருணைக் கண்ணோடு சீர்தூக்கிப் பார்த்து, என்னென்ன வழிகளில் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இயலுமென்ற விவேகத் திறனான அணுகுமுறையுடன், ஆக்கப்பூர்வமான திட்டங்களை
வகுப்பதில் அரசு கால தாமதமின்றி செயல்படுவதே சிறப்பாகும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here