சட்டவிரோதமாகச் செயல்பட்ட 3 கோழிக் கடைகள் இழுத்து மூடப்பட்டன

கிள்ளான் –

சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த கோழி சுத்தம் செய்யும் கடைகள் கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனையின்போது இழுத்து மூடப்பட்டன.

கிள்ளான் தாமான் செந்தோசா, ஜாலான் கெபுன் ஆகியப் பகுதிகளில் செயல்பட்டு வந்த இந்த 3 கடைகளும் வியாபார உரிமம் இன்றி செயல்பட்டதுடன் சுகாதாரப் பாதுகாப்பில் அக்கறை கொள்ளாமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்ததாலும் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டதுடன் கடைகளில் இருந்த குளிர்பதனப் பெட்டி, கோழி சுத்தம் செய்யும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கிள்ளான் நகராண்மைக் கழக துணைத்தலைவர் எலியா மரினி டர்மின் தெரிவித்தார்.

அனுமதியில்லாமல் அரசாங்க நிலத்தில் அந்த கடைகள் செயல்பட்டு வந்ததால் கிள்ளான் மாவட்ட நில அலுவலகமும் மிகவிரைவில் அந்த கடைகளை உடைப்பதற்கு உத்தரவு பிறப்பித்ததுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்ரீ அண்டலாஸ் மற்றும் பண்டமாரான் பகுதிகளில் உள்ள கடைகளின் ஐந்தடிகளில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக குறிப்பிட்ட எலியா மரினி, பொதுமக்கள் நடக்கும் பாதையிலும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பொருட்களை பறிமுதல் செய்தும் அதனை பொருட்படுத்தாமல் பல கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் அதனைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு திடீரென நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here