நோன்பு மாதத்திலும் நிபந்தனை தொடரும்

கொரோனா ஆபத்தைத் தடுப்பதற்கு நாடு முழுமையும் அமலில் உள்ள பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவின் நிபந்தனைகள் நோன்பு மாதத்திலும் தொடரும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.

நோன்பு மாதத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிரந்தர நடவடிக்கை விதிமுறைகள் தொடரும் என்றார் அவர். எனினும் முஸ்லிம்கள் நோன்பு தொடங்குவதற்கும் நோன்பு துறப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும் வழிவகுக்க சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரமலான் மாதத்தில் பொதுப் போக்குவரத்து சேவையை மாலை 4.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரை நீட்டிப்பது என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முன்பு இந்தச் சேவை நேரம் மாலை 5.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பொதுச் சந்தை மார்க்கெட்டுகளுக்கான சேவை நேரம் காலை 6.00 மணியில் இருந்து பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு பொது மார்க்கெட்டுகளின் சேவை நேரம் காலை 6.00 மணி தொடங்கி நண்பகல் 12.00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

உணவகங்களின் சேவை நேரம் நீட்டிக்கப்படுமா என்று கேட்டபோது, அப்படி நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் பதிலளித்தார். உணவகங்களும் கடைகளும் காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அதன் பிறகு அவை மூடப்பட வேண்டும் என்றார் அவர்.

நாட்டில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு நடப்பு நிபந்தனைகளை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்குமானால் சிலர் விதிமுறைகளை மீறக்கூடும். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அவர்கள் பலவிதமான காரணங்களைச் சொல்வார்கள் என்றார் அமைச்சர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here