விரைந்து உதவினார் பேராக் மந்திரி புசார்
ஈப்போ –
இங்குள்ள தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் 100 வீடுகள் கனத்த மழையாலும் பலத்த காற்றாலும் சேதமடைந்துள்ளன. இவ்வட்டாரத்திலுள்ள கம்பம் மற்றும் தாமான் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேராக் மந்திரி பெசாரும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமாட் பைசால் டத்தோ அஸுமு கூறினார்.
சேதமடைந்த இந்த வீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், கடுமையாக சேதமடைந்த வீட்டின் குடும்பத்தாருக்கு மாற்று இடம் தயார் செய்து தரப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக அவர்களை ஸ்ரீ கிளேபாங் ஆரம்பப் பள்ளி மண்டபத்தில் தங்க வைக்கலாம். அப்படி குறைவான எண்ணிக்கை என்றால் வாடகைக்கு எடுக்கப்படும் ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
அதுமட்டுமன்றி, இந்த பிரச்சினையில் சிக்கியவர்களுக்கு உணவுகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கினார் மந்திரி பெசார்.
சேதமடைந்த வீடுகளை பேராக் அறவாரியத்தின் உதவியோடு விரைவில் பழுதுபார்த்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். அத்துடன், சேதமடைந்த வீடுகளின் குடும்பத்தாருக்கு நிதியுதவியை கிந்தா மாவட்ட ஆட்சியாளர் பணிமனை வழங்குவார்கள் என்றார் மந்திரி பெசார்.
இறுதிக்கட்ட ஆய்வின்படி மழை புயல் காற்றால் சுமார் 364 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிய வருகிறது. இப்பிரச்சினையில் சிக்கிய அனைத்து குடும்பத்தாருக்கும் உதவிகள் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமாட் ஃபைசால் தெரிவித்தார்.